கடைசி டெஸ்ட் போட்டியில் ரகானே பொறுப்பான ஆட்டம்: முதல் நாளில் இந்தியா 231/7

இந்தியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்ங்கை தேர்வு செய்த இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. 

துவக்க வீரர்களான முரளி விஜய் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகவும் நிதானமாக ஆடிய ஷிகர் தவான் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் விராட் கோலி 44 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மா, சகா இருவரும் தலா ஒரு ரன்னும், ஜடேஜா 24 ரன்களும் எடுத்தனர்.   

அதேசமயம் 5-வது வீரராக களமிறங்கிய ரகானே பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். 91 பந்துகளில் அரை சதம் (உள்ளூர் மைதானத்தில் முதல் அரை சதம்) கடந்த அவர் ஆட்டநேர முடியும் வரை களத்தில் இருந்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது. ரகானே 89 ரன்களுடனும், அஷ்வின் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீடிட் 4 விக்கெட்டுகளும், அப்போட் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது.

228283