இழந்து நிற்கும் எமதூரின் கௌரவத்தை மீட்டெடுக்க முதலில் எமது இளைஞர் சமூகம் முறையாக வலுவூட்டப்படுவதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் !

சப்றின்

ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக இருப்பது இளைஞர்களே. நேரிய சிந்தனையும், சீரிய ஒழுக்கமும் கொண்ட இளைஞர்கள்தான் ஒரு சமூகத்தின் மிகப் பெரும் சக்தி. அற்ப அரசியல் இலாபங்களுக்காக சக்திமிக்க எமது இளைஞர் சமூகமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்ததன் விளைவாக இன்று எமது மண்ணின் மரியாதை கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கிறது. சமூக நலன் குறித்த சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டு போலியான சுய நலன்களின் பால் இளைஞர்கள் வழிநடாத்தப்படுகின்றனர் என அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி கூறினார்.

haniffa mowlavi

அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரசின் காரியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற இளைஞர் அமைப்பு தெரிவுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – அக்கரைப்பற்று மண்ணுக்கு புகழ்பூத்த நீண்ட வரலாறு ஒன்றிருக்கிறது. சமயம், கல்வி, கலை, கலாசாரம், இலக்கியம், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி இப்பிரதேசத்தின் பெருமையாக எமதூர் நீண்டகாலம் தலை நிமிர்ந்து நின்றிருக்கின்றது. ஆனால் கடந்த தசாப்தங்களில் நிகழ்ந்த சீர்கேடுகளால் எமது மண்ணின் மகிமை அல்லது கௌரவம் மிகவும் பின்தள்ளப்பட்டிருக்கிறது இதில் அரசியல் பிரதான தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது.

இழந்து நிற்கும் எமதூரின் கௌரவத்தை மீட்டெடுக்க முதலில் எமது இளைஞர் சமூகம் முறையாக வலுவூட்டப்படுவதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். சிறப்பான தலைமைத்துவப் பண்புகளை அவர்களில் ஏற்படுத்த வேண்டும். தனி மனிதர்களின் சுயநல நிகழ்ச்சி நிரல்களுக்குப் பின்னால் இழுத்துச் செல்லப்படும் இளைஞர்கள் அதிலிருந்து விடுபட்டு சமூகநலன், தேசிய நலன், சர்வதேச நலன் எனும் பாதையில் எமது சக்தியை ஒன்றுதிரட்டி நாகரிகமாகப் பயணிக்க ஆரம்பிக்கவேண்டும்.

வெறுமனே வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்கான அல்லது சட்டங்களில் சிக்காமல் குற்றங்கள் புரிவதற்கான ஒரு ஆயுதமாக அரசியல் அதிகாரத்தைப் பார்க்காமல் தனி மனித உரிமைகளையும், சுதந்திரங்களையும் உறுதிப்படுத்தி பாதுகாப்பான மகிழ்ச்சிகரமான ஓர் சமூக வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்கான ஒரு முக்கியமான கருவியாக அரசியலை இளைஞர்கள் நோக்க வேண்டும் என மேலும் கூறினார். இதனைத் தொடர்ந்து இளைஞர் அமைப்பு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.