பொறியியல் பீடம் பறி போகுமா..?  (பாகம்-02) !

SEUSL-Front (1)_Fotor

இப் பல்கலைக்ககழக மாணவர்கள் தங்களால் ஆங்கில மொழி அறிவினைக் கூட விருத்தி செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.இவர்களின் இக் குற்றச் சாட்டினை வேலைக்காறிக்கு பிள்ளைச் சாட்டு போன்றே குறிப்பிட வேண்டும்.ஏனைய பொறியியல் பீடங்கள் அமைந்துள்ள பல்கலைக்கழக வெளிச் சூழலினை ஆங்கிலத்திற்கு ஏதுவான ஒரு சூழலாக எதனை வைத்து இவர்கள் குறிப்பிடுகிறார்கள்? அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கற்பதன் மூலம் சிங்கள அறிவினை விருத்தி செய்ய முடியுமே தவிர வெளிச் சூழல் அவர்களின் ஆங்கில மொழியின் விருத்திற்கு சிறு பங்களிப்பினைக் கூட செய்யப்போவதில்லை.சிங்கள மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்ற ஏனைய பல்கலைக்கழகங்கள் அமையப்பெற்றுள்ள இடங்களில் ஆங்கிலம் கதைத்தால் குறித்த நபர் வெளியுலகத்து நபர் போன்றே நோக்கப்படுவார்.மேலும்,கிழக்கு,அம்பாறை மாவட்டத்திலுள்ள அதிகமான பாடசாலைகளில் ஆங்கில  மொழி மூலமான (English medium) கற்கைகள் தொடரப்படுகின்றன.இப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியினை வாசிக்க கூட இயலாத அளவு ஆங்கில மொழி அவர்களிடம் தாக்கம் செலுத்துவதனை அவதானிக்க முடிகிறது..இப்படியாக ஆங்கில மொழியில் ஒரு புரட்சி தோன்றிக் கொண்டிருக்கும் இவ் அமைவிடத்தின் மீது இக் குற்றச்சாட்டினை முன் வைத்திருதை ஒரு போதும் ஏற்க முடியாது.

இப் பல்கலைக்கழகம் எவ்வாறான நிலையில் ஆரம்பிக்கப்பட்டது? ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பௌதீக வளங்கள் எவ்வாறு காணப்பட்டன? என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளும் போது மேலுள்ள சில வினாக்களுக்கு பதில் கிடைக்கும்.1978 ஆம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24ம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக 1995 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் நிறுவப்பட்டது.பின்னர் அது 1995ம் ஆண்டு மே 15 ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டது.வெறும் 33 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பல்கலைகழகம் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்விக் கல்லூரியிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.சில காலங்களின் பின்னரே ஒலுவிலுக்கு இடமாற்றப்பட்டது.ஒலுவிலுக்கு இடமாற்றம் செய்த போது அப் பிரதேசம் பற்றைக் காடுகள் நிறைந்த இடமாகவும் நடப்போரின் கால்களை முட்கள் பதம் பார்க்கும் ஒரு இடமாகவுமே காணப்பட்டது.பாழடைந்த கைவிடப்பட்ட அரிசி ஆலைக் கட்டிடத்தில் தான் இது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதில் இதுவும் ஒன்றாகும்.அன்று வளம் இல்லையே! என்று ஆரம்பித்திருக்காவிட்டால்,இன்று இப் பல்கலைக்கழகத்தினை நாம் பெற்றிருப்போமா? இது எத்தனை உள்வாரி,வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களினை உருவாக்கி எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பங்களிப்புச் செய்துள்ளது? இப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படுவதற்கு சுமார் 14 வருடங்கள் முன்பு ஆரம்பிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தினை விட இப் பல்கலைக்கழகம் உலகின் பல்கலைக்கழக தர வரிசையில் சுமார் 2830 இடங்கள் முன்னிலை வகிக்கின்றது என்பது இப் பல்கலைக்கழக வளர்ச்சியினை அறிந்து கொள்ள போதுமானதாகும்.இதன் வளர்ச்சியினை நிரூபிக்க இன்னும் பல நியாயங்களினை எடுத்து வைக்கலாம்.இப்படியான பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய துறைகளினை அவமானப்படுத்தும் வகையில் குறித்த பொறியியல் துறை மாணவர்களினது இடமாற்றக் கோரிக்கை தொடர்பான அறிக்கையில் அவைகளும் இங்கே பெரிதும் வளர்ச்சியடையவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.கழுதை கழுதையின் வேலையினைப் பார்க்க வேண்டும்,கழுதை நாயின் வேலையினைப் பார்க்கும் போது முரண்பாடுகள் வேறு வடிவம் பெறுகிறது.

1990 காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பற்ற சூழல் நிலவியது.இதனைக் கருத்திற் கொண்ட அஷ்ரப் மிக அவசர அவசரமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தனக்கு இருந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி இப் பல்கலைக்கழகத்தினை நிறுவினார்.அன்று வளங்கள் இல்லாமல் இருந்தாலும் தேவை ஒன்று உணரப்பட்டிருந்தது.அத் தேவையின் முன் வளங்கள் என்பது அன்றைய மாணவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லை.இன்று தேவை பெரிதாக இல்லை என்பதால் வளங்கள் இல்லை என்பது தூக்கிப் பிடிக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளது.தேவைப்படும் நிலை மீண்டும் வராது என்பதற்கு எது வித உத்தரவாதமும் இல்லை.மஹிந்த ராஜ பக்ஸ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம்கள் சில வேளை இப் பல்கலைக்கழகத்தின் தேவையினை உணர்ந்திருக்கலாம்.எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது? யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? என்பவை பற்றி யாருமே அறிய மாட்டார்கள்.வெள்ளம் வருவதற்கு முன்பு அணைகட்ட வேண்டும்.அஷ்ரபிடம் அன்று அரசியல் அதிகாரம் இருந்தபடியால் அவசர அவசரமாக இதனைப் பெற்றுத்தந்தார்.இன்றுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகள் இவ்வாறான ஒரு சூழலை சந்திக்க நேரிட்டால் கச்சைக்குள் வாலைத்தான் ஒளிப்பார்கள்.அழுத்தம் பிரயோகித்து பெறும் அளவு இவர்களிடம் அரசியல் அதிகாரமும் இல்லை.நாம் எமக்கான தேவைகளினை நிறைவேற்றிக் கொள்ள இதுவே ஏதுவான சந்தர்ப்பம்.இதனைத் தவற விடுவோமாக இருந்தால் அது வரலாற்றுத் தவறாக மாறும்.இது இனவாதமோ? பிரதேச வாதமோ? அல்ல. எமக்கான தற்காப்பு நடவடிக்கையே!

ஏனைய துறைகள் போன்று பொறியியற் துறையினையும் நாம் நோக்க முடியாது.ஏனைய பல துறைகளுக்கு பயிற்சி (practical) பெருதும் அவசியம்  இல்லை.போதியளவு பயிற்சியின்றி பொறியியற் துறையில் எதனையும் சாதிக்க முடியாது.இதற்கு தகுந்த வளங்களினை குறித்த பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்த வேண்டும்.இம் மாணவர்கள் தங்களது இப் பிரச்னைக்கு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு இப் பீடத்தினை இட மாற்றக் கோருகின்றனர்.இப் பீடமானது ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு இட மாற்றப்பட்டாலும் அங்கும் இதே வளங்கள் பூச்சியத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.எனினும்,கல்வி வளங்கள் அங்குள்ளதாக அம் மாணவர்கள் நியாத்தினையும் எடுத்து வைக்கின்றனர்.தற்போது இப் பல்கலைக்கழகத்தில் ஓரிரு பௌதீக வளங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன.263 மில்லியன் செலவில் நீரியல் பரிசோதனை கூடம் ( hydrology laboratory ) கட்டப்பட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் கையளிக்கப்படும் நிலையில் உள்ளது.இதனைச் சுற்றி இன்னும் சில வளங்கள் ஏற்படுத்துவதற்கு குறித்த பல்கலைக்கழகத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.அதாவது பணத்தினைக் கொண்டு ஏற்படுத்தும் வளங்களினை சாதிப்பது ஒரு பெரிய விடயமே அல்ல.எமது அரசியல் வாதிகள் இவ் விடயத்தில் கரிசனை கொண்டிருப்பின் எப்போதோ? இவ் வளப்பற்றாக் குறையினை  நிவர்த்தி செய்திருக்கலாம்.நாம் இப் பல்கலைக்கழகத்தினை இச் சந்தர்ப்பத்தில் தவற விடுவோமாக இருந்தால் அதில் பெரும் பங்கு எமது அரசியல் வாதிகளுக்கு உண்டு.அஷ்ரபின் நாமத்தில் பிழைப்பு நடாத்தும் எமது அரசியல் வாதிகளுக்கு அவரின் இலட்சியங்களினை நிறைவேற்ற நேரமில்லை என்பதுவே கவலைக்குரிய விடயமாகும்.

தென் கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பான இப் பிரச்சினை பற்றி ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கதைத்துள்ளார்.இவர் இப் பிரச்சினையினை அறிந்த காலப்பகுதியில் எமது அரசியல் வாதிகளுக்கு இது பற்றி  தெரியுமோ தெரியவில்லை.ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ் விடயத்தில் தனது மூக்கினை நுழைத்த விடயமானது,இது அரசியற் பின்புலம் கொண்ட ஒரு பிரச்சனையா? என்ற சந்தேகப்பார்வை பலரிடையே தோற்றுவித்துள்ளது.எமது பகுதிகளில் இல்லாவிட்டாலும் பொதுவாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஜே.வி.பியின் கட்டுப் பாட்டில் இருக்கும்.இப் பல்கலைக்கழகத்தின் குறித்த சில மாணவர்கள் ஜே.வி.பி தலைவரினைத் தொடர்பு கொண்டு பேசியதன் விளைவே அவர் தனது மூக்கினை நுழைக்க காரணம் எனலாம்.இது அவர்கள் எந்தளவு மக்களுடன் பின்னிப் பிணைந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு விடயமும் கூட.ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ் விடயத்தில் மூக்கினை நுழைக்கும் விடயமானது அவ்வளவு ஆரோக்கியமான ஒன்றல்ல.அவருக்கு எமது நோக்கங்கள் புரியப்போவதில்லை.அவர் பொதுவான சிந்தனை கொண்டவர்.அம் மாணவர்கள் இத்தோடு மாத்திரம் நின்றுவிட வில்லை தங்களது சக பல்கலைக்கழக மாணவர்களினையும் தங்களது போராட்டத்திற்கு உதவுமாறு அழைப்பும் விடுத்துள்ளனர்.அவர்களும் சில சில உதவிகளினையும் செய்துள்ளதாக அறிய முடிகிறது.தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இட மாற்றப்படாது என அமைச்சர் ஹக்கீமிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக கதை சிலாகிக்கப்படுகிறது.அமைச்சர் றிஷாதிடம் சென்ற மாணவர்களுக்கும் தான் இப் பிரச்சினை பற்றிப் பார்க்கின்றேன் என்ற அடிப்படையிலேயே பதில் வழங்கப்பட்டுள்ளது.இந்த மூன்று வருகாலமும் இவர்கள் எங்கே இருந்தார்கள்? பிரச்சனையினை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால்,இப் பிரச்சினை இந்தளவு விஷ்வரூபம் எடுத்திருக்குமா? அரசியல் வாதிகளின் உறுதி மொழிகளினை நம்பி நிம்மதி பெரு மூச்சிடும் சமூகமாக எமது சமூகம் இல்லை.மாணவர்களிடம் போராடி எவ் அரசும் ஜெயித்த வரலாறுகள் எங்கும் இல்லை.எனவே,இனியும் எமது அரசியல் வாதிகள்,மக்கள் தூங்குவார்களாக இருந்தால் வெள்ளம் தலைக்கு மேல் பாய்ந்து விடும்.

தொடரும்……

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.