அபு அலா
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 50 இலட்சம் ரூபா செலவில் பாலமுனை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பார்வையாளர் அரங்கை பார்வையிடுவதற்காக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் நேற்று திங்கட்கிழமை (30) மாலை திடீர் விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
பிரதி அமைச்சர் பைசால் காசிம் அங்கு நடைபெறும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டதன் பின்னர், இந்த நிர்மாணப் பணிகள் யாவும் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் முடிவடையவேண்டும் என பணிப்புரை வழங்கி வைத்தார்.
இந்த பார்வையாளர் அரங்கை முழுமையாக நிர்மானிக்க இன்னும் 20 இலட்சம் ரூபா பணம் மேலதிகமாக தேவைப்படுகின்றது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்பாளருமாகிய சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் பிரதி அமைச்சர் பைசால் காசிமிடம் எடுத்துரைத்ததையடுத்து அதற்கான 20 இலட்சம் ரூபா பணத்தினை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.
இந்த விஜயத்தில் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், சுகாதார பிரதி அமைச்சரின் ஆலோசகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் கலீல் றஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.