அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஶ்ரீ.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபை முதல்வர் அழைப்பு!

 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் அரசாங்கத்திற்கு நல்குமாறு சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

laxman-436x360

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (27) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அழைப்பை விடுத்தார்.

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 இற்கு ஆரம்பமானது.

எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இன்றைய விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதுடன், ஊழலை ஒழிப்பதற்கான விசேட சட்ட திட்டங்களை உருவாக்குவது அவசியமாகும் என்றும் வலியுறுத்தினார்.

அரச நிர்வாகத்தினுள் ஊழல் புரையோடிப் போயுள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தங்களுடைய ஒரு அரசாங்கத்தில் தமது கட்சி எதிர்கட்சியாக செயற்படுகின்றது என்பதையும் இரா. சம்பந்தன் அரசாங்கத்திற்கு நினைவூட்டினார்.

இதனையடுத்து இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு –செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு தயாராய் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 6 மாதங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதாகவும் சபை முதல்வர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த விவாத்த்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர, கடந்த காலம்தொட்டு ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்டு வந்த திறந்த பொருளாதார கொள்கையின் விழுமியங்களை இம்முறை எடுத்துக்காட்டினார்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் திறந்த பொருளாதார கொள்கையை ஆர். பிரேமதாச தொடர்ந்து முன்னெடுத்ததாகவும், அதன் பின்னர், அந்த திறந்த பொருளாதார கொள்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்திறன் மிக்கதாக இம்முறை வரவு –செலவுத்திட்டம் ஊடாக பிரதிபலிக்கச் செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார்.

இதன் பின்னர் அமைச்சர் ஜோன் அமரதுங்க கருத்து தெரிவித்த போது சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடமபெற்றன.