ஆடுகளத்தில் பூதமேதுமில்லை, சிக்கல் பேட்ஸ்மேன்களின் எண்ணத்தில் தான் : கவாஸ்கர் !

இந்தியா– தென் அப்பிரிக்கா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் நாக்பூரில் நேற்று முன் தினம் தொடங்கியது.

தொடக்க நாளிலேயே பந்து மிகவும் நன்றாக திரும்பியது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு முதல் நாளிலேயே இருந்தது. நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் 12 விக்கெட்டுகள் விழுந்தன. இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளும் தென்ஆப்பிரிக்காவின் 2 விக்கெட்டுகளும் ஆக மொத்தம் 12 விக்கெட்டுகள் 87.2 ஓவரில் விழுந்தன.

sunil GAVASKAR_2009817f
பின்னர் 2-ம் நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 79 ரன்களுக்குள் சுருண்டது. இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியும் 173 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. நேற்று ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 20 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. 

இதனையடுத்து, ஆடுகளத்தின் தன்மை குறித்து மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறியது தொடர்பாக முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் பிஷன்சிங் பெடி அதிருப்தி தெரிவித்தார். 

இந்நிலையில், ஆடுகளத்தில் எந்த பூதமேதுமில்லை, சிக்கல் பேட்ஸ்மேன்களின் எண்ணத்தில் தான் உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்:-

”பேட்ஸ்மேன்களின் ஆடும்திறன் குறித்து ஏன் நாம் கேள்வி எழுப்புவதில்லை. இது வழக்கமான சுழற்பந்துக்கு சாதகமான இந்திய ஆடுகளம் தான். சிக்கல் பேட்ஸ்மேன்களின் மனதில் தான் உள்ளது ஆடுகளத்தில் இல்லை.

விக்கெட்டுக்கள் எளிதில் விளக்கூடிய ஆடுகளம் தான் இருப்பினும் அதிக அளவிலான விக்கெட் வீழ்ச்சிக்கு இரு அணிகளின் மோசமான ஆட்டம் தான் காரணம்.” என்றார்.