அபு அலா –
பல வருடங்களாக சுகாதார பணியாளர்களாக எவ்வித வேதனமில்லாமல் கடமையாற்றி வருகின்றவர்களுக்கு நியமனம் வழங்கக்கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் கோரிக்கை விடுத்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர் தலைமையில் இன்று வியாழக்கிழமை (26) சுகாதார அமைச்சில் இம்பெற்ற இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களாக கடமையாற்றிய பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர் கூறுகையில்,
கிழக்கு மாகாண, திருகோணமலை மாவட்டத்திலுள்ள சுமார் 30 மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தங்களின் தனிப்பட்ட வேலைகளையெல்லாம் ஒருபுரம் ஒதுக்கிவிட்டு கடந்த 09 வருடங்களாக வைத்தியசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கான நியமனங்களை வழங்கிவைக்க சுகாதார அமைச்சராகிய நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கடந்த பல வருடங்களாக சுகாதார பணியாளர்களாக கடமையாற்றி வந்துள்ள விடயம்பற்றி நானறிவேன். இவர்களுக்கான நியமனங்களை வழங்கிவைப்பது தொடர்பில் என்னாலான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளேன்.
அத்துடன் இதுதொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் பிராந்திய பணிப்பாளர்களுடனும் கலந்துரையாடி இதற்கான முடிவை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.