விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை : உயிர் பிழைத்த விமானி பேச்சு !

 ரஷிய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார்.  துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ரஷியாவின் போர் விமானம் ஒன்றை சிரியா எல்லையில் நேற்று சுட்டு வீழ்த்தியது. துருக்கி வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷியாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.  

621765_1

 இச்சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.   சிரியாவில் ரஷியாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிக்கு ரஷியா கண்டனம் தெரிவித்தது.  துருக்கியின் வான்பகுதிக்குள் ரஷியாவின் போர் விமானம் செல்லவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  ரஷிய விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, துருக்கியின் விமானங்கள் ரஷியா விமானிகளுடன் எந்த ஒரு தொடர்பும் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் துருக்கிக்கு ஆதரவு அளித்த அமெரிக்கா, இப்பிரச்சனையை விட்டு விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டது.  

 ஆனால் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக ரஷிய விமானிகளை துருக்கி தொடர்பு கொள்ளவில்லை என்ற ரஷியாவின் குற்றச்சாட்டை துருக்கி மறுத்தது. ரஷிய விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் 10-முறை எச்சரிக்கை விடுத்தோம்… துருக்கியின் எல்லையை தாண்டிய 5 நிமிடங்கள் எச்சரிக்கை நீடித்தது என்று துருக்கி தெரிவித்தது. இந்நிலையில் எச்சரிக்கை விடுத்தோம் என்ற துருக்கியின் கூற்றை, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி மறுத்து உள்ளார். 

  கேப்டன் முராக்தின் பேசுகையில், துருக்கி வான் எல்லையை விமானம் மீறுவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது. விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்னதாக எந்த ஒரு எச்சரிக்கையும் துருக்கியால் விடப்படவில்லை என்று கூறி உள்ளார். விமானத்தில் இருந்த மற்றொரு விமானி உயிரிழந்து விட்டார்.  இச்சம்பவத்தில் ரஷியா கோபம் அடைந்து உள்ளது.  இவ்விவகாரத்தில் அமைதியாக இருங்கள் என்று அமெரிக்கா, ஐ.நா. சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் கேட்டு கொண்டு உள்ளது.