அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை !

jaya_1481569f

 

 பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் (26-ந் தேதி) தொடங்க இருக்கிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி வருகின்றன.

இந்த நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் ஒன்றை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.பி.க்கள் 49 பேர் (மக்களவை 37 பேர், மாநிலங்களவை 11 பேர், புதுச்சேரி மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர்) கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், காலை 11.10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கூட்டத்தில், எம்.பி.க்களிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ‘‘தமிழக வெள்ளச் சேதங்கள் குறித்தும், அதற்கான மத்திய அரசின் நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது குறித்தும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.