ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

un
ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பிரான்ஸ் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த திங்கட்கிழமை சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்கள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. தொடர்ந்து அங்கு போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் இந்த தாக்குதல்களுடன் தனது அதிரடி நடவடிக்கையை நிறுத்தவில்லை. 

இருநாட்களுக்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்தது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்க அனுமதிக்கவேண்டும், ஐ.நா. சபையில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஒருங்கிணைந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை தோற்கடிக்கவேண்டும் என்று அந்த தீர்மானத்தில், வலியுறுத்தப்பட்டு இருந்தது. 

தாக்கல் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் இந்த தீர்மானத்தின்மீது ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த தீர்மானத்தை எந்த நாடும் எதிர்க்கவில்லை. மற்ற நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா மற்றும் நிரந்தரம் அல்லாத 10 உறுப்பு நாடுகளும் ஆதரவை தெரிவித்தன. இதனால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. 

வழக்கமாக இதுபோன்ற தீர்மானங்கள் தாக்கல் ஆகும்போது, இது இன்னொரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் ஈடுபடுவதாகும் என்று கூறி வல்லரசு நாடுகளான ரஷியாவும், சீனாவும் தங்களது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி அதை நிறைவேறவிடாமல் தடுப்பது வழக்கம். ஆனால், பிரான்ஸ் கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்த நாடுகளும் தங்களுடைய ஒருமனதான ஆதரவை தெரிவித்தன. 

கடந்த மாதம் 31–ம் திகதி எகிப்து நாட்டின் சினாய் தீபகற்ப பகுதியில் ரஷிய பயணிகள் விமானம் வெடித்து சிதறி 224 பேர் பலியானதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாசவேலையே காரணம் என்பது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. 

இதேபோல், சில நாட்களுக்கு முன்பு சீனர் ஒருவரின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். பிரான்சின் இந்த தீர்மானத்தை எதிர்க்காமல் ரஷியா மற்றும் சீனாவும் ஆதரவு தெரிவித்ததற்கு இதுவே பின்னணி என்று அறியப்படுகிறது. 

எனவே, ஐ.எஸ். தீவிரவாதிகளின் மீதான பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமனப்படையினரின் தாக்குதல் இனி முழுவீச்சில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.