மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான கினியா, சியாரா லியோன் மற்றும் லைபிரியா நாடுகளை தலைக்குப்புற கவிழ்த்தி போட்டது எபோலா என்ற வைரஸ் உயிரிக்கொல்லி நோய். இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர் தனிமை படுத்தப்பட்டார். மருந்து ஏதும் கண்டு பிடிக்காததால் எளிதில் மற்ற நபர்களை தாக்கி மரணத்திற்குள்ளாக்கியது. மரணம் அடைந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தக்கூட ஆளில்லா பரிதாக நிலை ஏற்பட்டது.
இதனால் உலக நாடுகள் தங்கள் நாட்டில் இந்த வைரஸ் பரவி விடக்கூடாது என்று பலத்த பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் கடும் போராட்டத்திற்குப்பிறகு 6 மாதங்களுக்குப் பின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. லைபிரியாவில் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி இந்த வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டது என பிரகடனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று 10 வயது சிறுவன் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
லைபிரியாவின் தலைநகர் மோன்ரோவியாவின் கிழக்கு புறநகரில் அமைந்துள்ள பேனெஸ்வில்லேவில் 6 பேர் கொண்ட ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்த குடும்பத்தின் 10 வயது சிறுவனுக்கு எபோலாவின் அறிகுறி தென்பட்டுள்ளது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எபோலா வைரஸ் பரிசோனை செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேருக்கு வைரஸ் தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவரமாக கவனிக்கப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி பெர்னிஸ் டான் கூறுகையில் ‘‘எபோலா எப்படி பரவுகிறது. எப்படி கட்டுப்படுத்தவது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் விழிப்புணர்வு மற்று ஒருங்கிணைந்து பணிபுரிவது முக்கியமானது’’ என்றார்.
கடந்த ஆண்டு லைபிரியாவில் இந்த வைரஸ் நோய்க்கு 10,600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 4808 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.