மாலி நாட்டின் தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குள் சிறப்புப்படையினர் அதிரடியாக நுழைந்ததையடுத்து, பிணைக்கைதிகளில் 80 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாலி நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கடந்த மூன்றாண்டுகளாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடிக்கும் இந்த கும்பல், அரசிடம் பணம்கேட்டு மிரட்டியும் வருகின்றது. பணம் தராவிட்டால் பிடித்து வைத்திருக்கும் மக்களை ஈவிரக்கமின்றி இவர்கள் கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாலி நாட்டின் தலைநகரான பமாக்கோ நகரில் உள்ள பிரபலமான ராடிசன் ஓட்டலுக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் அங்கு ஏழாவது மாடியில் தங்கியிருந்த சுமார் 30 ஓட்டல் ஊழியர்கள் உட்பட 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
பதிலுக்கு உள்ளே இருக்கும் தீவிரவாதிகளும் துப்பாக்கிகளால் திருப்பிச் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த ஓட்டல் இருக்கும் பகுதி முழுவதும் போர்க்களம்போல் காணப்படுகிறது. பிணைக்கைதிகளில் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதையடுத்து, ஓட்டலுக்குள் புகுந்த சிறப்புப்படையினர் உள்ளே புகுந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உள்ளே இருந்த தீவிரவாதிகள் அல்லாஹூ அக்பர் உள்ளிட்ட இஸ்லாமிய கோஷங்களை எழுப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
மாலி ராணுவத்திற்கு உதவும் விதமாக பிரான்ஸ் ராணுவமும் அந்த ஓட்டலை சுற்றி வளைத்துள்ளது. உள்ளே நுழைந்த சிறப்பு படையினர் 80 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் ஜீப்பில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படும் புகைப்படத்தையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
முன்னதாக, பிணைக்கைதிகளில் 20 பேரை சிறப்புபடையினர் பத்திரமாக மீட்டனர். பிணைக்கைதிகளில் 20 பேர் இந்தியர்கள் என்றும், இவர்கள் துபாயைச் சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அங்குள்ள இந்திய தூதர் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.