( வீடியோ ) பாரீஸ் தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டது உறுதியானது : பிரான்ஸ் அரசு !

 

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 129 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த தாக்குதல்களின் பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டவன், மொராக்கோவில் பிறந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த அப்துல் ஹமீது அபாவுத் (வயது 27) என்பது புலன்விசாரணையில் அம்பலமானது. அவன் சிரியாவில் இருக்கக்கூடும் என நினைத்து, அவனை உயிரோடு பிடிப்பதற்கு பாரீஸ் தீவிரவாத தடுப்பு படை திட்டம் தீட்டி வந்தது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டுமழையும் பொழிந்து வந்தன.

இந்த நிலையில்தான் அவன், பாரீஸ் புறநகரான செயின்ட் டெனிஸில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருக்கும் திடுக்கிடும் தகவல், தீவிரவாத தடுப்பு போலீஸ் படைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்த படையினரும், ராணுவமும் நேற்று முன்தினம் அதிகாலை அங்கே விரைந்தன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.20 மணிக்கு தொடங்கிய தாக்குதல் 7 மணி நேரம் நீடித்தது. துப்பாக்கி குண்டுகள் வெடிப்பு ஒரு புறம், வெடிகுண்டுகள் வெடிப்பு இன்னொரு புறம் என அந்த நகரமே போர்க்களமாக மாறியது.

முடிவில் ஒரு பெண் தீவிரவாதி, தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து, உடல் சிதறி பலி ஆனார். இன்னொரு தீவிரவாதி கொல்லப்பட்டு, உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து சின்னாபின்னமானது. 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் யாருக்காக இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த தீவிரவாதி- அப்துல் ஹமீது அபாவுத் சிக்கினானா, கொல்லப்பட்டானா என்பதில் குழப்பம் நிலவி வந்தது.

அவன் கொல்லப்பட்டு விட்டதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் ரிச்சியர், டெல்லியில் தெரிவித்தார். இருப்பினும் தன்னிடம் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், அவன் கொல்லப்பட்டு விட்டதை பிரான்ஸ் அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது தொடர்பாக அந்த நாட்டு அரசின் சார்பில் மூத்த வக்கீல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போலீஸ் நடத்திய அதிரடி வேட்டையில் அப்துல் ஹமீது அபாவுத் கொல்லப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு உமிழ் நீர் சோதனை உதவியது” என கூறப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அபாவுத், கடந்த 2 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியதிலும், ஆள் எடுத்ததிலும் முக்கிய பங்காற்றியவர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வெளியுறவு செயல்பாடுகளில் முக்கிய பங்களிப்பும் செய்து வந்துள்ளார். அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பாரீஸ் தாக்குதல்களை தொடர்ந்து சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் 35 இலக்குகளை பிரான்ஸ் ராணுவம் நிர்மூலமாக்கியது.

இதுபற்றி பிரான்ஸ் ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் கில்லிஸ் ஜாரோன் குறிப்பிடுகையில், “சிரியாவில் 6 இடங்களில் பிரான்ஸ் விமானங்கள் 60 குண்டுகளை போட்டன. இதில் 35 இலக்குகள் அழிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள், கட்டளை பிறப்பிக்கும் மையங்கள் ஆகும். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை வலுவிழக்கச்செய்வதே இந்த குண்டுவீச்சின் நோக்கம்” என கூறினார்.