ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரபூர்வ இதழான தபிக்கில் ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்தின் சினாய் அருகே வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் நொறுங்கியதில் 224 பேர் பலியாகினர்.
இந்த விமானத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர்.
இந்நிலையில், அந்த தீவிரவாத அமைப்பு வெளியிட்டு வரும் தபிக் எனும் இதழில், இந்தத் தாக்குதலுக்கு தாம் பயன்படுத்தியதாகக்கூறி ஷ்வெப்ஸ் கோல்ட் எனும் குளிர்பான குப்பி, டெட்டனேட்டர் மற்றும் ஒரு சுவிட்ச் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர்.
“கலிஃபேட் முஸ்லிம்களை கோழைத்தனமாக குண்டு வீசி கொலை செய்தவர்கள் தங்கள் விமானத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர். ஓட்டுநர் அறையில் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதியவர்கள் மீதும் பழி தீர்க்கப்பட்டது” எனவும் தபிக் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் பலியான ரஷ்யர்களின் கடவுச்சீட்டின் படங்களையும் ஐ.எஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தலைமை கூட்டுப்படைகளைச் சேர்ந்த ஒரு விமானத்தைத் தகர்க்கவே முதலில் திட்டமிடப்பட்டதாகவும், பின்னர் ரஷ்யா வான்வழித் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்ததையடுத்து தமது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் ஐ.எஸ் தெரிவித்துள்ளது