இலங்கை குறித்த ஐ.நாவின் தகவல் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளின் கருத்து!

686309964Untitled-1
ஈழத் தமிழர் படுகொலைக்குப் புதிய சான்றுகள் இருப்பதாகவும், இவை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கைத் தீவில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற ஐ.நா.வின் விசாரணைக்குழு புதன்கிழமை வெளியிட்டு இருக்கின்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை கடற்படைத் தளத்தில் சித்திரவதைக் கூடங்கள் இருந்தன.  

2010க்குப் பிறகும் ஈழத் தமிழர்கள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன, சுவர்களில் படிந்துள்ள இரத்தக் கறைகள், கை ரேகைகள், ஈழத் தமிழர்கள் தொடர்ந்து அந்த அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள், இதுபோல இன்னும் பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளன என்றும், அந்தக் குழு தெரிவித்து இருக்கின்றது.  

இக் குழுவின் தலைவரான கனடாவின் பெர்னார்டு துஹைம் மற்றும் அர்ஜென்டைனா நாட்டின் ஏரியல் துருக்கி, தென்கொரியாவின் தவ்-உவ்-பெய்க் ஆகியோர், இது குறித்து மேலும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறி உள்ளனர். 

மேலும், ‘நாங்கள் அறிந்த மட்டிலுமே 20,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப் பகுதியில் காணாமல் போயிருக்கின்றனர்’ என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இலங்கைத் தீவில் இனப்படுகொலை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதற்கு மேலும் ஒரு ஆதார சாட்சியாக மூவர் குழுவின் தகவல்கள் அமைந்துள்ளன. 

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? இலங்கைக் கொலைக்களத்திற்கு ஆதாரங்களைத் தேட வேண்டுமா? 

உலகெங்கும் வாழும் தமிழர்கள், நீதி கிடைக்கவும், விடியல் காணவும் தொடர்ந்து அந்தந்த நாடுகளிலும் அறப் போராட்டங்கள் மூலம் அழுத்தம் தர வேண்டியது முக்கியமான கடமை என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

அத்துடன் இலங்கையில் ஐ.நா தகவல் பற்றி முழு விசாரணை நடத்தவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவும் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கையில் சித்திரவதைக் கூடம் செயல்பட்டு வந்ததாக வெளியாகியுள்ள இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லை. ஏனெனில், இலங்கையில் காலம்காலமாகவே சித்திரவதைக் கூடங்கள் செயல்பட்டு வந்தன என்பதும், இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழர்கள் அங்கு வைத்து கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை ஆகும். 

சித்திரவதைக் கூடம் ஒன்றைத் தான் ஐ.நா. குழு இப்போது கண்டுபிடித்துள்ளது. இதேபோல் இன்னும் எத்தனை சித்திரவதைக் கூடங்கள் எங்கெங்கு செயல்பட்டன… இன்னும் செயல்பட்டு வருகின்றன என்பது தெரியவில்லை. 

இலங்கை தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கனோர் வெலிக்கடை சிறை உள்ளிட்ட பல சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சித்திரவதைகளும் ஒருவகை போர்க்குற்றம் தான். எனவே, இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும். 

அதுமட்டுமின்றி, இலங்கையில் செயல்பட்டு வந்த, செயல்பட்டு வரும் சித்திரவதைக் கூடங்கள் குறித்து பன்னாட்டு குழுவை அனுப்பி முழு விசாரணை நடத்தவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

இலங்கையில் இரகசிய சித்ரவதைக்கூடம் பற்றிய ஐ.நா.குழுவின் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் தரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கைச் சிறைகளில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவிக்கச் சொல்லி கடந்த சில நாட்களாக ஈழத் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சித்ரவதைக்கூடம் பற்றிய ஐ.நா.குழுவின் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசு இப்போதாவது அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் இது குறித்து இந்திய பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.