காத்தான்குடி – ( தொடர்-3 )

 முஹம்மட் நிரௌஸ்

ஓலைக் குடிசையில் வாழ்ந்தார்
ஊரில் வரும்படி தாழ்ந்தோர்.
காசு பணம் கூட உள்ளோர்
களிமண்ணால் கட்டினார் இல்லம்.

ஆலூடு உள்ளூடு என்றும்
அடுப்படி சாப்பறை என்றும்
நாலு பகுதிகள் இருக்கும்
நடுவில் உஞ்சில் பறக்கும்.


unnamed

 

 

 

 

 

 

 

 

முன்னுள்ள சாப்பறை ஒட்டி
முற்றத்தில் குருத்து மண் கொட்டி
தென்னங் குற்றிகள் வெட்டி-மண்
சரியாமல் போடுவார் சுற்றி.

மாவும் தென்னையும் கமுகமும் -அதில்
கூவும் குயிலும் சேவலும்
தாவும் அணிலும் பூனையும்
யாவும் இயற்கையின் படைகள்
இருந்த ஊரின் கொடைகள்.

கிணற்றுக்குள் மதுர மரக் கொட்டு -அதில்
கிடைக்கும் நீர் அமுதம் கொட்டும்
சாம்பலால் பல்லை விளக்கி
சோம்பலின்றி திலாந்தினால் அள்ளி
ஆம்பிளைங்க குளிக்கின்ற வேளை
அது பழகிய ஊரின் அழகிய காலை.

பெரிசாக ஆகும் முன்னே
பெண்கள் திருமணம் முடித்து
கரிசணையாய் குடும்பம் காத்தார்.
புருசனை நம்பி வாழ்ந்தார்
வரிசையாய் பிள்ளைப் பெற்றார்
அறுசுவை உணவு சமைத்தார்.
விரிசல்கள் குறைந்த வாழ்க்கை.
(ஊர் ஊரும்….)
—————————-
பி.கு.- எனது தாய் மாமாவும் பிரபல நாவல் ஆசிரியருமான ஜுனைதா ஷெரீப் அவர்களின் சின்ன மரைக்கார் பெரிய மரைக்கார் நாவலை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்படுகிறது.