எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் : நவீன் !

முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன தன் விருப்பின் பேரில் அல்லாமல் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இராஜினாமா செய்துகொண்டதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஹட்டன் – கினிகத்தேனை பிரதேசத்தில் நேற்று (16) திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

naveen-dissanayake_0

சர்ச்சைக்குரிய எவன்காட் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக இருந்த திலக் மாரப்பன, நல்லாட்சி அரசாங்கத்தில் பொறுப்பாக நடந்துகொண்டார் என்று கூறமுடியாது. 

அமைச்சரவை அமைச்சராக இருந்துகொண்டு எவன்காட் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகராக கடமையாற்றிய அவரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியும், பிரதமரும் கேட்டுக்கொண்டார்கள். 

இதற்கமையவே அவர் இராஜினாமா செய்துகொண்டார். 

நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் இதுபோன்ற நடைமுறையே பின்பற்றப்படும். 

எனினும் இந்த சம்பவத்தை தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் பரவிவருகின்றன. 

அவ்வாறான கருத்து வேறுபாடு அரசாங்கத்திற்குள் கிடையாது. 

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் இருக்கும். 

அடுத்தவருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அனுகூலங்கள் நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.