அபு அலா –
யூனானி மருந்துகளை தயாரிக்கும் இயந்திரத்தை பெற்றுத்தருவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் எங்கு சென்றாவது நான் பெற்றுத்தருவேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய யூனானி மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் நேற்றிரவு சனிக்கிழமை (14) அக்கரைப்பற்று ஆசியன் செப் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற யூனானி வைத்தியர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யூனானி மருந்துகளை தயாரிக்கும் இயந்திரத்தை கொண்டுவருவதாக இருந்தால் கிழக்கு மாகாண சபைக்கு கிடைக்கும் பணம் போதாது. இதனை மத்திய அரசாங்கத்தினூடாக இணைந்துதான் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இயந்திரத்தை பெற்றுத்தருவதற்காக நான் எமது நாட்டின் ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ சந்தித்தாவது இந்த இயந்திரத்தை பெற்றுத்தருவதற்கு என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் பின்தங்கிய ஆயுள்வேத வைத்தியசாலையை முன்னெற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துவருகின்றேன். அத்துடன் எமது நாட்டிலுள்ள எல்லா மாகாணங்களையும் விட ஒரு சிறந்து ஆயுள்வேத வைத்தியத்துறையை வழங்கும் ஒரு கிழக்கு மாகாணமாக மாற்றியமைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றேன்.
யூனானி மருத்துவ சங்கத்தினால் இன்று முன்வைக்கப்பட்ட சகல தேவைகளையும் நான் நிறைவேற்றவுள்ளேன். நீங்கள் கடமையாற்றும் வைத்தியசாலைகளில் தேவைப்படுகின்ற அனைத்த குறைகளையும் ஒரு வாரத்திற்குள் எழுத்து மூலமாகத்தர வேண்டும். அதில் மிக அவசரமாக தேவைப்படுகின்றவற்றை மிக விரைவில் செய்து தருவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்றார்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர் எ.எல்.தவம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுடீன் மற்றும் கல்முனை பிராந்திய யூனானி மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.நபீல் ஆகியோர்களுக்கு பொண்னாடை போர்த்தி ஞாபகச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுடீன் மற்றும் கல்முனை பிராந்தியத்தில் ஆயுள்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் யூனானி வைத்தியர்களும் கலந்துகொண்டனர்.