பாரிஸில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த வன்செயல்கள் ஐ எஸ் அமைப்பால் தொடுக்கப்பட்ட ஒரு போர் என பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் வர்ணித்துள்ளார்.
அவர்களுக்கு இத்தக்குதல்களுக்கு பிரான்ஸுக்குள்ளேயிருந்தே உதவிகள் கிடைத்துள்ளன என்றும் அதிபர் ஒலாந் கூறியுள்ளார்.
இத்தாக்குதல்களை அடுத்து அவர் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
பாரிஸில் ஆறு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில், தற்கொலை குண்டுதாரிகள் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வளாகம் ஒன்றில், குண்டுதாரிகள் மிகவும் அருகிலிருந்து சுட்டதில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் பிரான்ஸ் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கான தண்டனையே இத்தாகுதல்கள் என தாக்குதல்களை நடத்தியவர்கள் கத்தினார்கள் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார்.
முன்னதாக துப்பாக்கித்தாரிகள் அருகாமையிலுள்ள உணவு விடுதிகளில் கண்மூடித்தனமாக பலரைச் சுட்டுகொன்றனர்.
வேறு சிலர் பிரான்ஸின் தேசிய விளையாட்டு அரங்கத்துக்கு வெளியே குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அப்போது அந்த அரங்கத்தில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியொன்றை அதிபர் ஒலாந் பார்த்துக் கொண்டிருந்தார்.