பாரிஸ் நகரில் தொடர் தாக்குதல்கள்:குறைந்தது 170 பேர் பலி!

பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்களை அடுத்து அனைத்து எல்லைகளையும் பிரான்ஸ் மூடியுள்ளது.

பாரிஸ் நகரிலுள்ள மக்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

151113215503_paris_640x360_ap_nocredit

குறைந்தது மூன்று துப்பாக்கித்தாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நகரின் வட கிழக்குப் பகுதியில் குறைந்தது இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன.

ஒரு உணவு விடுதியிலும், இசை அரங்கு ஒன்றிலும் இத்துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன.

அந்த இசை அரங்கிலேயே மிக அதிக அளவிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இவை மட்டுமன்றி தேசிய விளையாட்டு அரங்கிலும் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அந்த அரங்கில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றபோது, நாட்டின் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந்த் ஜெர்மனிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

தாக்குதல்களை நடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இத்தாக்குதல்கள் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டவையா என்பது குறித்து உடனடியாக சொல்ல முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.