சோபித தேரர் சகல சமயத்தவர்களையும் மதிக்கும் இந்த யுகத்தின் ஒரு மாமனிதராக திகழ்ந்தார். அனுதாப நிகழ்வில் அப்துல் காதர் மௌலவி

 

1

-எம்.வை.அமீர் –

மறைந்த மாமனிதர் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின்இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு அநீதிகளுக்கு எதிரான குரல் ஓய்ந்து விட்டதா? ஏன்ற மனக்கவலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்று சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் எம்.ஐ.அப்துல் காதர் மௌலவி தெரிவித்தார்.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை,உலமாசபை மற்றும் மஜ்லிஸ் சூரா என்பன இணைந்து சோபித தேரரின் மறைவை முன்னிட்டு சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்த அனுதாப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சோபித தேரர் சகல சமயத்தவர்களையும் மதிக்கும் இந்த யுகத்தின் ஒரு மாமனிதராக திகழ்ந்தார். என்று தெரிவித்த அப்துல் காதர் மௌலவி, ஏனைய சமயங்களையும் கற்றறிந்தவராகவும் காணப்பட்டார் என்றும் சில சந்தர்ப்பங்களில் குர்ஆன் வசனங்களைக்கூட ஓதி உரைகளை ஆற்றியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

சோபித தேரரின் மறைவு நல்லாட்சியை விரும்பும் அனைத்து இலங்கையருக்கும்  பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் 

சோபித தேரரின் வெற்றிடம் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் என்றும், அவர் வாழ்ந்த காலப்பகுதியில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஆற்றிய பணி இனமத எல்லைகளைத் தாண்டியது என்றும் அனுதாப நிகழ்வில்  மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத்தெரிவித்த மஜ்லிஸ் சூராவின் உபதலைவர் எஸ்.ஏ.றாசீக், முன்னைய அரசின் எதேச்சதிகாரம், ஊழல், அநீதிகள் என்பனவற்றுக்கெதிராக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தை சிறப்பாக வழிநடாத்திய ஆளுமைமிக்க ஒரு பௌத்த சமயத் தலைவராக சோபிததோர் செயற்பட்டு வந்தார் என்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, தேர்தல் முறைமையில் சீர்திருத்தம், தேசிய நல்லிணக்க அரசாங்கம் உருவாக்கம் என்ற விடயங்களை தனது கொள்கைப் பிரச்சாரங்களின் இணைத்து பெரும்பாலானவற்றில் வெற்றியும் கண்டார் என்றும் தெரிவித்தார். 

அஞ்சா நெஞ்சத்துடன் நல்லாட்சியை வலுப்படுத்துவதில் தனது பங்களிப்பை உச்ச அளவில் மேற்கொண்டார். என்றும், மிகுந்த மக்கள் செல்வாக்கும், ஜனரஞ்சகமும் கொண்ட சமய சமூகத்தலைவரான சோபித தேரர், இக்கால யுக நாயகன் என்றும் தெரிவித்தார். ஒரு நடு நிலையான பௌத்த துறவியாக செயற்பட்டு சமதான சகவாழ்வுக்கு இதயசுத்தியுடன் குரல் கொடுத்த இவருக்கு நன்றியையும் அவரது மறைவுக்கு அனுதாபத்தையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத்தலைவர் கே.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபை பொதுச்செயலாளர் எம்.எம்.சலீம், யு.எல்.அமீன் மௌலவி போன்றவர்களும் உரையாற்றினர்.