-எம்.வை.அமீர் –
இந்த நல்லாட்சி மாற்றத்திற்கு மிக முக்கிய பங்கு வகித்த புலம்பெயர் தொழிலாளர் சமூகமாகிய நாம் என்ற உரிமையோடும். மற்றும் எமது தேசிய வருமானத்தின் உயிர்நாடி புலம்பெயர் தொழிலாளர் சமூகமாகிய நாமே என்ற உரிமையோடும், இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் சில கேள்விகளை கேட்பதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். 05.11.2015 அன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கையில் பல நியாயமான கேள்விகள் எழுகின்றன,
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள, புலம் பெயர் தொழிலாளர்களின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் எவை என்று விவரிக்க முடியுமா ?. எம்மால் ஒன்றையுமே வெளிப்படையாக காணவே முடியவில்லை.
மற்றும், இடைக்கால பொருளாதார கொள்கையில் , அரச ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், முன்னுரிமை அளிக்கப் பட்டிருக்கும் அதே சமயம் , இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய பங்காளியான புலம்பெயர் தொழிலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப் பட்டிருப்பது ஏன் என்பதை தெளிவு படுத்த முடியுமா ? .
மேலும் , உருவாக்கப் பட இருக்கும் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களில் , நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கும், அவர்களது உறவுகளுக்கும் எத்தனை தொழில் வாய்ப்புக்கள் ஒதுக்கப் பட உள்ளது என்று கூற முடியுமா ? அதே சமயம், அமைக்கப் பட இருக்கும் 05 இலட்சம் வீடுகளில், வீடில்லாத, நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான ஒதுக்கீடு பற்றி கூற முடியுமா ?
ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளடக்கப் பட்டார்களா ? என்பதையாவது தெளிவு படுத்த முடியுமா ?
இறுதியாக, நல்லாட்சி மாற்றத்தின் பின்னர் இனியாவது எமது அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்புகள் மழுங்கடிக்கப் படுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது. எமக்கென்ற ஒரு அரசியல் சக்தியை நாங்களே உருவாக்கவேண்டும் என்பதை நியாயப் படுத்துகின்ற சூழ்நிலைக்கு அரசாங்கம் எங்களை தள்ளுகின்றதா ?. மேலும் வாக்களிப்பு வசதி இல்லாமல் போனதன் தாற்பரியத்தை இது எங்களுக்கு உணர்த்துகிறதா ?. மேலும், வாக்களிப்பு வசதி எதற்காக செய்து கொடுக்கப் படவேண்டும் என்பதற்கு நியாயம் கற்பிக்கும் ஒரு சான்றாக இந்த அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கை சான்று பகர்கின்றதா ?.
என்றெல்லாம் சில கேள்விகள் எம்மக்கள் மத்தியில் ஓரிரு தினங்களாக ஊசலாடுகின்றன.