ஆரம்பகால கட்சிப் போராளிகளை புறக்கணிக்கிறதா மு.கா ?

 

எஸ்.அஷ்ரப்கான்

  

முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக அதிகாரமற்று மாற்று கட்சிகளின் தயவுடன் தங்கள் உரிமைகளை, வாழ்வியல் விடயங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கு பெரும்பான்மை இனத்தவர்களின் தயவை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்த காலப்பகுதியில், அரசியல் தலைமைத்துவமும், வழிகாட்டலுமின்றி சிங்கள பெரும் தேசியக் கட்சிகளிலும், தமிழ் இயக்கங்களிலும் முஸ்லிம்கள் சிதறுண்டு சின்னாபின்னமாகி இருந்தனர்.

 

இலங்கையில் இரண்டு தேசிய இனமே இருக்கின்றது என்று கூறுமளவு முஸ்லிம்கள் தமிழ் பேசும் தமிழர் தரப்பிற்குள் ஒழித்துவைக்கப்பட்டு முகவரியற்று இருந்தனர்.  

 

இலங்கை – இந்திய ஒப்பந்தம்  உள்ளடங்கலாக சிங்கள அரசுக்கும், தமிழ் தரப்புக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டது. ஆனால் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்புக்கள் வழங்கப்படவில்லை. மட்டுமல்லாது முஸ்லிம்களின் அபிலாசைகளை, உரிமைகளை, பிரச்சினைகளை அப்போது தேசிய ரீதியாக வெளிக் கொண்டுவருவதற்கான பலமோ, சிந்தனையோ இருக்கவில்லை. இது பாரிய பிரச்சினையாக இருந்தபோதிலும் அப்போதைய முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கான தனி அரசியல் முகவரி தொடர்பாக எவ்வித சிந்தனையுமற்ற நிலையில், தமது பாராளுமன்ற பிரவேசத்தை பேரினவாத கட்சிகளின் ஊடாக நிறைவேற்றவும் முஸ்லிம்களுக்கு ஓரளவு சேவை செய்வதற்கும் முன் நின்றார்கள்.ஆனால்  தனியான அரசியல் அதிகாரத்தினுடாக முஸ்லிம்களின் முகவரி என்பது மறைந்த தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்அவர்களின் சிந்தனையிலேயே உருப்பெற்று முஸ்லிம்களின் விடுதலை இயக்கமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கி இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் ஒரு தனியான தேசிய இனமே எனும் விழிப்பை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்தியம்பினார்.

 

பேரினவாதிகளின் பிடியிலிருந்து முஸ்லிம்களை விடுவித்து, விலக்கி குறிப்பாக முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட வடக்கு கிழக்கில் அரசியல் ரீதியான பாரிய உணர்வுள்ள முஸ்லிம் அரசியல் இயக்கமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரசை முஸ்லிம்களுக்கு வழங்கிவைத்தார். இக்கட்சியின்  ஊடாக முஸ்லிம்கள் அந்தஸ்துடன் அப்போது தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. இக்கட்சியின் அரசியல் கொள்கைகளில் முஸ்லிம்களுக்கான அரசியல் விடுதலை, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கும் அதனை அடியொட்டிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதும் அடங்குகின்றது.

 

சிங்கள கட்சிகளிலும், தமிழ் இயக்கங்களின் பிடியிலும் சிந்தனையற்று இருந்த முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கீழ் ஒற்றுமைப்படுத்தி அதில் பாரிய வெற்றியும் கண்டார் மு.கா. ஸ்தாபகத் தலைவர். 

 

அதன் பிற்பாடு மு.கா கட்சியானது கட்சியின் வளர்ச்சியில் அபிவிருத்தி என்ற மாயையை காட்டி முஸ்லிம் வாக்குகளை சூரையாடிய பேரினவாத கட்சிகளிடமிருந்து மக்களை மீட்டெடுத்தார். அபிவிருத்தி  தொடர்பில் மக்களுக்கு எந்தவித வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. அபிவிருத்தியும், தொழில் வாய்ப்புக்களும் நாம் வழங்க மாட்டோம்.  இவை அனைத்தும் அரசின் கடமை என்ற சிந்தனையை பெரும்பான்மை இனத்திற்கு எடுத்துக் கூறியது முஸ்லிம் காங்கிரஸ். அந்தளவு வாக்குப்பலத்தை கொண்டு அப்போது ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கியது மு.கா.

 

அவ்வப்போது ஆட்சிக்கு வரும் பெரும்பான்மை கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து ஒப்பந்தங்களைச் செய்து முஸ்லிம்களுக்கான தேவைகளை பெரும்பான்மைகளிடத்தில் இருந்து பெறுகின்ற அளவு பெரும் சக்திமிக்க வாக்குப்பலம் கொண்ட கட்சியாக பல தியாகங்களுக்கும் மத்தியில் வளர்க்கப்பட்டதே இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும். 

 

இனப்பிரச்சினை தீர்வின்போது இணைந்த வட-கிழக்கு அல்லது கிழக்கு, அல்லது தென் கிழக்கு என்ற ரீதியிலேயே முஸ்லிம்களுக்கு சுய ஆட்சியுடன் கூடிய அதிகார அலகை  பெறுவதனையும் ஒரு கொள்கையாக  முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்ததுடன் இதில் முஸ்லிம்களின் பாதுகாப்பே பிரதானமானதாகவும் நோக்கப்பட்டது.

 

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது தமிழ் தரப்பினர் எந்த கொள்கையில் தங்களது பயனத்தை ஆரம்பித்தார்களோ அதே கொள்கையிலேயே எந்தவித பின்னடைவுமின்றி இன்றுவரை அதனை அடையும் ஒன்றித்த நோக்கோடு பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே நோக்கத்துடன் இன்று அது பயனித்துக்கொண்டிருக்கின்றதா?  என்பது கேள்விக்குறியே. 

 

இன்று முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற பலருக்கு அதன் கொள்கை, மற்றும் என்ன நோக்கத்துக்காக மு.கா. ஆரம்பிக்கப்பட்டது என்ற சிறிதளவு அறிவுவோ, அல்லது உணர்வோ இல்லை. மு.கா. க்கு முஸ்லிம் மக்களின் அதிக பட்ச ஆதரவு இருப்பதனால் அதனை வைத்து தங்களது அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் பொருட்டு பதவியை பெறுதல், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தல், வரலாற்றில் தடம்பதித்தல் போன்ற நோக்கங்களுக்காக சுயநலவாதிகள் பலர் மு. கா. க்குள் ஊடுருவியுள்ளனர். தங்களது சுயரூபத்தை மக்களுக்கு காட்டிக்கொள்ளாமல் தந்திரமாக காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முழுப்பொறுப்பையும் மு.கா வின் தலைமையே ஏற்க வேண்டும். 

 

உண்மையில் ஆரம்பகால போராளிகள் ஓரங்கட்டப்பட்டு முஸ்லிம் காங்கிரஸின் ஆணிவேர்கள் அறுத்தெறியப்பட்டு கிளைவேர்கள், புதிய பலமற்ற வேர்களின் மூலமே இன்று மரம் நிமிர்ந்து நிற்கின்றது. ஆனால் அது இனிவரும் காலங்களில் ஏற்படும் அரசியல் சூறாவழிக்கு தாக்குப் பிடிக்காமல் சாய்ந்து விடுமோ என்ற அச்சம் இன்று மக்கள் மத்தியில் குடி கொள்ள ஆரம்பித்துள்ளது. 

 

இதற்கு வழி மொழிவதைப்போல் கடந்த வாரம் சாய்ந்தமருதில் இளைஞர் காங்கிரசின் மகாநாடு நடைபெற்றதில் பல்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும், அங்கு ஆரம்பகால போராளிகள் அழைக்கப்படவில்லை என்றும் சாய்ந்தமருது இளைஞர் போராளிகளும் இல்லை என்றும் பாரிய குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு உண்மை என எடுத்துக்கொண்டால் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மிக உன்னிப்பாக இந்த விடயத்தில் மீண்டும் ஒரு முறை தவறு வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் அவர் உடன் இறங்க வேண்டும். அல்லது இந்த வாதம் பொய்யானது என்றால்  அதனை நிரூபிக்கவும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் முனைய வேண்டும்.

 

எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காத போது மு.கா. க்கும் அதன் தலைவருக்கும் துரோகம் செய்துவிட்டு மு.கா. சில் இருந்து வெளியேறும்போதுதான் இவர்களது சுயரூபம் மக்கள் மத்தியில்  வெளிச்சம்போட்டு காட்டப்படுகின்றது. தங்களது அற்ப சுயநல பதவியினை அடைந்து கொள்வதற்காக இவர்களால் பாவிக்கப்படுகின்ற  இறுதி ஆயுதம்தான் பிரதேசவாதமாகும். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக தங்களது ஊரை கூறிக்கொண்டு, ஊருக்கு எம்.பி பதவி அல்லது வேறு பல பதவிகளை வேண்டிக்கொண்டு ஒற்றுமையாக இருக்கும் முஸ்லிம்களை பிரதேச ரீதியாக பிரித்து சின்னாபின்னப்படுத்த முற்படுகின்றார்கள். 

 

முஸ்லிம் காங்கிரசை பிளவு படுத்துவதற்கு வெளிச்சக்திகள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருப்பது எப்போதும் வழமையாகும்.இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும், பொறுப்புள்ள உயர் பீடமும் பொறுப்பற்ற விதத்தில் நடக்காமல் பல தியாகங்கள் செய்து வளர்த்த கட்சியை பாதுகாப்பதற்கும் மக்கள் முன் நின்று பொறுப்பான விதத்தில் செயலாற்றுவதற்கும் தற்போதைய மு.கா. வினர் முனைய வேண்டும். 

 

கட்சி முன்னெடுக்கும் எந்த செயற்பாட்டிலும் சரி ஒட்டுமொத்த போராளிகளை அரவணைத்து செல்கின்ற நிலை உருவாக வேண்டும். மக்கள் என்கின்ற சக்திக்கு முன்னால் எதிரிகளாக, விமர்சிக்கப்படுபவர்களாக மாறாமல் இலங்கை முஸ்லிம்களின் உரிமைக் குரலாக மு.கா. முன்பு போன்று ஒலிக்க வேண்டும். இல்லையேல் இதர கட்சிகளும், எதிரிகளும் பலமாகி குருகிய காலத்திற்குள் மரம் சாய்ந்துவிடும் நிலை ஏற்படலாம். அப்போது அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் (மு.கா) செல்லாக்காசாகி விடுவீர்கள். மக்களே இங்கு சிறந்த தீர்ப்பாளர்கள் என்பதை மு.கா வும் அதன் தலைமையும் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.

(நன்றி சுடர் ஒளி)

 ashraf khan