ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் நேற்று 06.11.2015 இரவு 8.30 மணிக்கு கண்டி ஒக்றே ஹோட்டலில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணிக்கு கண்டியில் இடம்பெறவிருக்கும் கட்சியின் பேராளர் மாநாட்டில் கட்சியின் பதவி நிலைகள் அறிவிக்கப்படவிருப்பதன் காரணமாக நேற்று உயர்பீடமும் அங்கேயே இடம்பெற்றது.
கட்சியின் உயர்பீடக்கூட்டம் ஒருபோதும் இல்லாதவாறு நேற்று உறுப்பினர்கள் அல்லாதவர்களும் பார்த்துக்கொண்டிருக்கக் கூடியவாறு பெரும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கட்சியின் உறுப்புரிமை பதவி நிலைகள் உயர்பீட உறுப்பினர்களால் கலந்துரையாடலின் பின்னர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் முதலில் வகுத்த பதவி நிலைகளில் எந்த மாற்றமுமின்றி தலைவர், செயலாளர், தவிசாளர், பொருளாளர் பதவிகள் இருந்தவர்களுக்கே வழங்கப்பட்டன.
ஆனால் கட்சியில் மேலதிகமாக பிரதித் தலைவர் என்ற பதவி சேர்த்துக்கொள்ளப்பட்டு திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவு செய்யப்பட்டமையுடன் இன்றைய பேராளர மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.