போதுமிந்த மாற்றுக் கருத்துக்களின் மோதல் !

 ட்டிமன்றம் அல்லது விவாதம் ஒன்று இடம்பெறுகின்ற போது சில விதிகள் பின்பற்றப்படும். என்னதான் காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் மையப் புள்ளியில் இருந்து விலகிச் செல்லாதபடி கருத்துக்களை முன்வைப்பதில் இரு தரப்பும் மிகக் கவனமாக இருக்கும். வாதப் பிரதிவாதங்களை முன்வைப்பதற்கு சில வரைமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நேர அளவு கொடுக்கப்பட்டிருக்கும். அது முடிவடையும் போது மணி ஒலிக்கும். இதுவே ஒரு போட்டி நிகழ்ச்சியாக இருந்தால், விதிகளை மீறினாலும் மணி ஒலிக்கவிடப்பட்டு அவரது வாய்ப்பு முடிவுக்கு கொண்டுவரப்படும். இந்த மணி ஒலித்தல் என்பது பல்வேறு குழுஉக்குறிகளைக் கொண்டது.

Muslims_Resettle_3

வட மாகாணத்தில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக கடுமையான கருத்தாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களும் தமிழர்களும் தமக்கிடையில் ஒத்த மற்றும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதுடன் தமிழினம் தங்களுக்குள்ளேயே அடிப்படை விடயங்களில் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருப்பதையும் நன்றாக அவதானிக்க முடிகின்றது. வஞ்சிக்கப்பட்ட ஒரு மக்கள் பிரிவினருக்கு நடந்த அநியாயம் தொடர்பில் முன்வைக்கப்படும் கரிசனை என்பது சமூக அக்கறை, பிற்போக்குவாதம், முற்போக்குவாதம், விதண்டாவாதம் மற்றும் அரசியல் போன்றவற்றின் கலவையாக இருக்கின்றது. உன்னிப்பாக நோக்குவோருக்கு புரியும்.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில் முஸ்லிம்கள் தமது இழப்புக்களையும் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதில் குறிப்பாக வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து பலவித அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில் வடபுல முஸ்லிம்களின் வெளி யேற்றம் தொடர்பான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட கருத்து கடுமையான கருத்து மோதல்களை அதன் தொடர் விளைவாக்கியிருக்கின்றது.

தமிழர்களின் கோணம்

25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு துயர் நிகழ்வை, ஒவ்வொருவரும் வேறு வேறு கோணங்களில் பார்க்கின்றனர். யானை பார்த்த குருடன் போல சிலரும் கோயாபல்ஸ் போல சிலரும் வார்த்தைகளை வெளியிடுகின்றனர். தாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை மற்றவர் மீது திணிக்கும் அதிமேதாவித்தனம் எல்லோரது கருத்துக்களிலும் வெகுவாக தொனிக்கின்றது. எல்லாமுமாக, வடக்கில் வாழையடி வாழையாக வாழ்ந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுதல் என்ற அடிப்படை நோக்கத்திற்கு அப்பால் சென்று, தர்க்கவியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அளவு கடந்த வார்த்தைப் பிரயோகங்களும் உணர்ச்சிப் பிரவாகத்தில் வெளித் தெறிக்கும் வார்த்தைகளும், கருத்து மோதலையும் தாண்டி.. வேறொரு பின்விளைவுக்கு இட்டுச் சென்று விடுமோ என்ற உள்ளச்சம் சில தினங்களாக ஏற்பட்டிருக்கின்றது. எனவே மேற்சொன்ன பட்டிமன்றத்தின், விவாதப் போட்டியின் விதிமுறைகள் போல, இவ்விடயத்திலும் சில கட்டுப்பாடுகளை எல்லா தரப்பினரும் கடைப்பிடிப்பது நல்லதென தோன்றுகின்றது.

யாழ்.குடா நாடு உட்பட வட மாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் மாத பிற்பகுதியில் உடுத்த உடையோடு தம்முடைய தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு ஒரு காரணம் இருப்பதாக சொல்லப்படுவதால் முஸ்லிம்கள் சுயமாக வெளியேறவில்லை என்பதை தமிழர்களே நல்ல தெளிவாக ஏற்றுக் கொள்வார்கள். இந்நிலையில் 2002ஆம் ஆண்டு ஏப்ரலில் விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வெளியேற்றப்பட்ட என்ற சொல்லை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியேறிய என்று திருத்துவதற்கு முஸ்லிம் தரப்பு உட்பட்டதாக சொல்லப்பட்டாலும், மு.கா. தலைவர் ஹக்கீமும் அப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதாவுல்லா போன்ற இன்னபிற அரசியல்வாதிகளும் ஏதோவொரு பயத்தில் அதைச் செய்தார்கள் என்பதற்காக அதுவே உண்மையாகி விடாது என்பது தடித்த எழுத்துக்களால் குறிப்பிடப்பட வேண்டியது.

prabakaran rauff hakeem athaulla

ஆனால் இன்று முஸ்லிம்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும், அவர்கள் வெளியேறினார்களா, வெளியேற்றப்பட்டார்களா? அது இனச்சுத்திகரிப்பா, இனப் பாதுகாப்பா? என்பதற்கும் அதேபோல் அவர்களை புலிகள் ஏன் வெளியேற்றினார்கள் என்ற அடிப்படை காரணங்கள் மற்றும் முகாந்திரங்களை கண்டறிவதிலும் அதிக கவனம் செலுத்துவது அநாவசியமானது. இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் ஒரு சமூகத்தின் உள்நாட்டு இடம்பெயர்வை காரணங்களைக் கொண்டு நியாயப்படுத்தும் முயற்சியாகவும் இது அமைந்துவிடக் கூடும்.

வட மாகாண முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் ஏன் வெளியேற் றினார்கள் என்பதற்கு ஒரு காரணக் கதை சொல்லப்படுகின்றது. அதாவது 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப் பகுதியில் யுத்தம் உக்கிர நிலையை அடைந்திருந்தது. யாழ் நகரைச் சூழ தாக்குதல் வலுப் பெற்றிருந்தது. அரச படையினர் சற்று வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்நிலையில் சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் படையினருக்கு தகவல் கொடுத்ததாகவும் அதனாலேயே அவர்கள் இலக்குத் தவறாமல் தாக்கியதாகவும் புலிகளுக்கு ஒரு உளவுத்தகவல் கிடைத்தது. அத்துடன் இராணுவத்தினர் முஸ்லிம்கள் சிலருக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் ஒரு தகவல் வந்தது. இதனை புலிகள் முழுமையாக நம்பினர்.

தம்முடைய ஆளுகை நிலப்பரப்பிற்குள் முஸ்லிம்கள் இன்னும் நிலைத்திருப்பது தமது ஆட்புல கட்டுப்பாட்டை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்று புலிகள் கருதினர். இதனால் முஸ்லிம்களை வெளி யேற்றுவது என்ற முடிவை எடுத்ததாக சொல்லப்படுகின்றது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட 3 இலட்சமாக பெருகிவிட்ட வடபுல இடம்பெயர் சனத்தொகை இன்றுவரையும் அகதி வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு ஒரு முஸ்லிம் நபர் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தார் என்ற விடயத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாமல் விடலாம். அவர்களிடம் இதைவிடப் பெரிய காரணங்களும் இருக்கலாம். ஆயினும், 25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இவ் வெளி யேற்றத்திற்கான அடிப்படை காரணி இதுவல்ல என்பதும் இது ஒரு உடனடிக் காரணியாகவே இருக்கும் என்பதும் நாடறிந்த நிதர்சனமாகும். ஆனால், எவ்வளவோ கட்டுக்கோப்பாக இருந்த தமிழினத்திற்குள்ளேயே கறுப்புஆடுகளும் இருந்தன. ஏன் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இருந்து கூட பின்னாளில் காட்டிக் கொடுப்போரும் உருவாகினர் என்பதை வைத்துப் பார்க்கின்ற போது, முஸ்லிம்களுக்குள் ஓரிருவர் இராணுவத்தினருடன் தொடர்பை வைத்திருந்திருந்தால் அது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எல்லா சமூகத்திற்குள்ளும் எல்லாவிதமான ஆடுகளும் எக்காலத்திலும் இருக்கவே செய்கின்றன. ஆனால், அந்த முஸ்லிம் நபர் புலிகளது ரகசியங்களை இராணுவத்திற்கு சொன்னாரா என்பதே உண்மை கண்டறியப்பட வேண்டியது. அதைப் புலிகள் சரியாக செய்தார்களா என்பது தெரியாது.

Muslims-in-Jaffna-610x255

உண்மையில் ஒரு முஸ்லிம் காட்டிக் கொடுத்திருந்தால் அதற்காக அவரை பலியெடுத்திருக்கலாம். அவ்வாறு தமிழர்கள் பலருக்கே நடந்திருக்கின்றது. ஆனால், ஒரு கறுப்பு ஆட்டுக்காக மற்றைய எல்லா வெள்ளாடுகளையும் பண்ணையை விட்டு வெளியேறச் சொன்னது எவ்வகையில் நியாயம்? அவ்வாறு காட்டிக் கொடுத்தது உண்மையென்றால், அவ்வாறு காட்டிக் கொடுத்தவன் முஸ்லிம்களின் தலைவனோ அரசியல்வாதியோ அல்ல. தம்முடைய சுயலாபத்திற்காக எதையும் செய்யத் துணிகின்ற ஒருவனே அன்றி, அவன் பெரிய சமூக சிந்தனையாளனோ ஒட்டுமொத்தமான யாழ்.முஸ்லிம்களின் பிரதிபிம்பமோ அல்ல. இவ்வாறிருக்கையில் ஒருவனுக்காக எல்லா சாதிசனங்களையும் வெளியேற்றியது தவறு. இதனால்தான், பிற்காலத்தில் புலிகள் அது குறித்து மன்னிப்பு கேட்கும் தொனியில் வருத்தப்பட வேண்டிய நிலை உருவாகியது.

வாதங்கள் பிரதிவாதங்கள்

முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பில் தமிழர் தரப்பு இன்னும் சில விடயங்களை வாதமாக முன்வைக்கின்றது. அதில் ஒன்று, இது இனச் சுத்திகரிப்பு அல்ல. முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்று சில அரசியல்வாதிகளும் அபிப்பிராயப்படுகின்றனர். இதில் உண்மையும் இருக்கின்றது. எவ்வாறெனின், ஒருவேளை யாழ்.குடாநாட்டில் முஸ்லிம்கள் இருந்திருப்பார்கள் என்றால் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னரான உக்கிர மோதல்களில் இருதலைக் கொள்ளியாகி இழப்புக்களை சந்திக்க நேரிட்டிருக்கும். அத்துடன் இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்களை விட முஸ்லிம்களே அதிகம் கொல் லப்பட்டிருப்பர். எனவே, இவ்வெளி யேற்றம் முஸ்லிம்களை பாதுகாத்தது என்பது ஒருவிதத்தில் உண்மையே என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது அவர்களை பாதுகாப்பதற்காக அல்ல. அப்படியென்றால் காட்டிக் கொடுத்ததற்காக வெளியேற் றப்பட்டார்கள் என்ற ஒரு கதை இங்கே ஏன் வருகின்றது? அதேபோல் முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக புலிகள் வெளியேற்றி இருப்பார்கள் என்றால் தமிழர்கள் அழிந்து போகட்டும் என்ற நிலைப்பாட்டிலா புலிகள் இருந்தார்கள் என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியிருக்கும். எனவே, புலிகள் வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றியமையால் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்பது உண்மையே. ஆனாலும் அவர்களது அன்றைய நோக்கம் அதுவாக இருக்கவில்லை. அவ்வெளியேற்றத்தின் பின்விளைவாக அந்த நன்மை முஸ்லிம்களுக்கு கிடைத்தது என்பது இங்கு கவனிப்பிற்குரியது.

அதேபோல் இது இனச்சுத்திகரிப்பா இல்லையா என்ற விடயத்தை நோக்குகின்ற போது இங்கு வரைவிலக்கணங்கள், ஐ.நா. பிரகடனங்கள் பலவற்றை நோக்க வேண்டியிருக்கின்றது. எவ்வாறிருப்பினும், இதை முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு என்றே கருதுகின்றனர். ஏனென்றால் ஒரு சம்பவத்தால் பாதிக்கப்படும் சமூகம் அதனை எவ்வாறு உணர்கின்றதோ அவ்வாறே அதற்கு பெயர் வைத்திருப்பதை வரலாற்றில் காண்கின்றோம். வடக்கில் மேற்கொண்டது மனிதாபிமான யுத்தம் என்று அரசாங்கமும் சிங்கள மக்களும் சொன்னார்கள். அதனையே இன்று இனஅழிப்பு என்று தமிழர்கள் சொல்கின்றார்கள். ஏனென்றால் அவர்களது பார்வையில் அது இன அழிப்பாக தெரிந்திருக்கின்றது. அவர்கள் அனுபவித்த துன்பங்களும் இழப்புகளும் அதை வேறு ஒரு சொல் கொண்டு அழைப்பதற்கு இடம்கொடுக்கவில்லை. அவ்வளவுதான். அதுவே முஸ்லிம்கள் விடயத்திலும் நடந்திருக்கின்றது. ஒரு இனம், தான் வாழ்ந்த பூர்வீக நிலத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறிச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதற்கு தமிழ் அகராதியில் வேறு ஏதேனும் வார்த்தைகள் இருந்தால் இனிவரும் காலங்களில் அதைப் பயன்படுத்துமாறு முஸ்லிம்களை கோரலாம்.

இதேவேளை, வடக்கில் இருந்து வெளியேறினார்கள் என்பதற்காக வடபுல முஸ்லிம்கள் இன்று மிக மோசமான நிலையில் இல்லையே. சிறப்பாக வாழ்கின்றார்கள்தானே என்று சிலர் இணையத்தளங்களில் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர். இது அபத்தமான அபிப்பிராயமாகும். யுத்தத்தின் காரணமாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இறைவனின் உதவியால் அவர்களில் கணிசமானோர் பிரஜாவுரிமை பெற்று, நல்ல நிலையில் இருக்கின்றனர். அதனால் அவர்கள் புலம்பெயர்ந்தது பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து விட முடியாது. இப்போது செல்வச்செழிப்போடு இருந்தாலும் அவர்களது இழப்பையும், அகதி வாழ்க்கையின் அனுபவத்தையும், மனக் கவலைகளையும் அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இடம்பெயர் வின் வலிகளை சுமந்தபடி எங்கோ ஒரு தேசத்தில் ஏதோவொரு நிர்ப் பந்தத்திற்காகவே புலம்பெயர் தமிழ்

அகதிகள் யாவரும் வாழ்ந்து வருகின் றனர். எனவே யாழ். முஸ்லிம்கள் இப் போதிருக்கின்ற இடத்தில் நன்றாக உள்ளார்கள்தானே, பிறகெதற்கு மீள் குடி

யேற்றம் என்று கேட்பது, மறைமுக மாக

புலம் பெயர் தமிழர்களின் மனோ நிலை யை கேலி செய்வதாகவே அமையும்.

மன்னிப்பு கோர வேண்டியதில்லை

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்டது தொடர்பாக தமிழர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. வெளியிட்ட கருத்து காரசாரமான வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கின்றது.

ஒரு தரப்பு இதை இனச்சுத்திகரிப்பு என்றும் இன்னுமொரு தரப்பு இனச்சுத்திகரிப்பு அல்ல என்றும் வாதிடுகின்றன. முஸ்லிம்கள் வெளியேறினர் என்று சிலரும் வெளியேற்றப்பட்டனர் என்று இன்னும் சிலரும் வார்த்தைகளால் மோதிக் கொள்கின்றனர்.

தேசிய ஊடகங்கள் மற்றும் குடாநாட்டில் இருந்து வெளிவரும் ஓரிரு பத்திரிகைகள் மிகக் கவனமாக இவ்விடயத்தை கையாள்கின்றன. ஆனால், இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் மாற்றுக் கருத்துக்களால் நிரம்பி வழிகின்றது. சிலர் ஒருதலைப்பட்சமாகவும் ஓரிருவர் நடுநிலையாகவும் கருத்து வெளி யிடுகின்றனர். தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த கடுமையாக முயற்சிக்கின்றனர்.

இரு தரப்பிலும் முன்வைக்கப்படும் சில கருத்துக்கள் இனவெறுப்பு பிரசாரத்திற்கு மிக நெருக்கமானதாக இருப்பதை காண்கின்றேன். இது இனவாதமாக, இன முறுகலாக வலுவடைந்து விடக் கூடிய உள்ளுறை ஆற்றலை கொண்டிருப்பதை மிக பொறுப்புடன் கூற விளைவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் ஒரு விடயத்தை சொல்லியாக வேண்டும். அதாகப்பட்டது, முஸ்லிம்களை வெளியேற்றியது புலிகள். அது மகா தவறு. அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் இதற்காக தமிழ் பொது மக்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டியதில்லை. இந்த வெளியேற்றத்திற்கும் இன்னபிற இழப்புக்களுக்கும் சமான்ய தமிழ் சகோதரர்களுக்கு ஒரு துளியளவுகூட பங்கில்லை. தமிழர்களின் பேச்சைக் கேட்டு புலிகள் செயற்படவும் இல்லை. காடேறும் இராமபிரானை தடுத்த நிறுத்த முடியாத அயோத்தி மக்களைப் போல, முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது தமிழர்கள் இருந்தார்கள் என்று கூறப்படுவதில் உண்மையிருக்கின்றது. உயிர் பயத்தையும் துரோகிப் பட்டத்தையும் மீறி முஸ்லிம்களுக்கு சார்பாக குரல் கொடுப்பதற்கு ஒருசில முற்போக்கு சிந்தனையாளர்கள் இருந்தார்கள் என்றாலும், ஆணாளப்பட்ட அரசாங்கமே கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சாதாரண தமிழர்கள் தடுப்பது என்பது சாத்தியமற்றது என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றேன்.

இவ்விடயத்தில் அவசியமானவற்றை பேசாமல், தேவையற்ற குப்பைகள் எல்லாம் கிளறப்பட்டுக் கொண்டிருப்பதையும், பிரேதபரிசோதனை நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. வட புல முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்களா இல்லையா? இது வௌியேற்றமா இல்லையா? என்ற வாதமே இன்று மேலோங்கி இருக்கின்றது. தமிழில் இலக்கணப் பிழை காண்பது போல பெரிய கருத்து மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளுக்காள் பதில் கருத்துக்களை முன்வைப்பதை விடவும், தமிழ் சமூகத்திற்குள்ளேயே இது விடயத்தில் இரு வகையான நிலைப்பாடுகளை கொண்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இது தேவையற்றது எனத் தோன்றுகின்றது.

எப்படியோ வட மாகாண முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்கு வெளியே வாழ்கின்றனர். அவர்களை மீளக் குடியேற்ற வேண்டியதே அவர்களுக்கு செய்யக் கூடிய மிகப் பெரிய பிராயச்சித்தம். வரலாற்றுத் தவறை திருத்துவதற்கான பாதையும் அதுவே. அதையே இப்போது செய்ய வேண்டி இருக்கின்றது. அரசாங்கமும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களும் சகோதர வாஞ்சையுடன் அதற்காக பாடுபட வேண்டும். காரியத்தை முடிப்பதே இன்றைய தேவை. அதைவிட்டு விட்டு வார்த்தைகளால் மோதுதல் அநாவசியமானது. இரு சிறுபான்மை இனங்கள் தமக்கு இடையிலும், தமிழினம் தனக்குள்ளும் கருத்து முரண்பட்டுக் கொண்டிருப்பது எத்தனை பெரிய அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை கடந்த 30 வருடங்களில் நாம் எல்லோரும் கண்டிருக்கின்றோம்.

இந்நிலைமை இப்படியே போனால் அதன் விளைவுகள் மோசமானதாக அமையக் கூடும். மீண்டும் இரு சகோதர இனங்கள் நல்லிணக்க செயற்பாட்டை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க நேரிடும். ஏனென்றால் இக் கருத்து மோதல் கிருமிநாசினி போல ஆபத்தானது. அவதானமாக கையாள வேண்டும்.

இக் கட்டுரையின் தலைப்பே, கட்டுரையின் கடைசி வரியும் –

nifras
எ.எல் .நிப்றாஸ் – கட்டுரையாளர்

  எ.எல் .நிப்றாஸ் 
நன்றி – வீரகேசரி