அ. இ. ம. காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்படலாம் என தேர்தல் ஆணையாளர் வை.எல்.எஸ். ஹமீடுக்கு கடிதம்!

 

எஸ்.அஷ்ரப்கான், எம்.வை. அமீர்

 

கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஐந்து நட்சத்திர கிங்ஸ்பெரி ஹோட்டலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனால் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடை அப்பதவியிலிருந்து இடை நிறுத்தியதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவ்வாறு கட்சியிலிருந்து தன்னை  இடை நிறுத்துகின்ற அதிகாரம் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு இல்லை எனவும், இது சம்மந்தமாக கடிதங்கள் எதுவும் தனக்கு அனுப்பப்படவில்லை எனவும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தங்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைப்பதாக தனக்கு அறிவித்திருக்கின்றார். என்று தேர்தல் ஆணையாளர் வை.எல்.எஸ்.ஹமீடுக்கு தெரிவித்திருந்தார். அப்பொழுது றிஷாட் பதியுதீனுக்கு கட்சியின் யாப்பு ரீதியாக தன்னை நீக்க முடியாது என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இல்லை எனவும், வை.எல்.எஸ். ஹமீட் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.

Unknown_Fotor_Collage_Fotor

அதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் திகதி றிஷாட் அணியினரையும், வை.எல்.எஸ். அணியினரையும் இது தொடர்பாக கலந்துரையாடலுக்கு வருமாறு தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். அக்கலந்துரையாடலில் தனக்கு ஆதரவான கட்சியின் அதிகபட்ச உயர்பீட உறுப்பினர்களுடன் கலந்து கொண்ட வை.எல்.எஸ். ஹமீட் கட்சி யாப்பின் ஸரத்துக்களை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு தெளிவுபடுத்தி இவ்வாறான தீர்மானம் எடுக்கின்ற அதிகாரம் றிஷாட் பதியுதீனுக்கு இல்லை என்று வாதிட்டதோடு, அவ்வாறு தங்களுக்கு அறிவித்த அதேவேளை, தனக்கு அது தொடர்பாக எதுவித எழுத்துமூல அறிவித்தலும்  அனுப்பப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் இவ்வாறான சூழ்நிலையில் தேர்தல் ஆணையாளர் செயற்பட வேண்டிய சட்டப்பிரிவுகளையும் எடுத்துக் கூறி அச்சட்டப்பிரிவுகள் இவ்வாறான பிழையாக அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் அனுமதிக்கவில்லை. என்றும் தனது வாதத்தை முன்வைத்தார். எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தனது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தனக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வேண்டினார். 

 

இந்நிலையிலேயே இன்று (05.11.2015) தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.