தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான 2 ஆவது போட்டியில் இலங்கை அணியின் குசேல் ஜனித் பெரேரா மற்றும் திரிமான ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மேற்கிந்திய அணியின் வெற்றி கனவையும் தகத்தெறிந்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கை மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடை யில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான 2ஆவது போட்டி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று பகலிரவு போட்டியாக நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 26.4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பமான போது 38 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து ஓட்டங்களை குவிப்பதற்காக வேகமாக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 37.4 பந்துகளில் அடுத்தடுத்து சகல விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களை பெற்றது. ஜோன்சன் 83 ஓட்டங்களையும், சாம்வேல்ஸ் 63 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற்றனர்.
இலங்கை அணியி;ன் பந்து வீச்சில் மாலிங்க, மிலிந்த சிறிவர்தன ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இலங்கைக்கு டக்வொர்த் லூயிஸ் முறையில் 225 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
இலங்கையின் இன்னிங்சை தொடர ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்சானும் குசேல் ஜனித் பெரேராவும் களம் கண்டனர். கடந்த
போட்டியில் இலங்கை வெற்றி பெற உறுதுணையாக இருந்த டில்சான் இப்போட்டியில் அணி 40 ஓட்டங்களை பெற்றிருந்த போது சுனில் நரேன் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர் 17 ஓட்டங்களை பெற்றார். பின்னர் ஜனித் பெரேராவுடன் திரிமான கைகோர்த்தார்.
இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மேலும் இருவரும் இணைப்பாட்டமாக 156 ஓட்டங்களை பெற்றிருந்த போது குசேல் ஜனித் பெரேரா 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஒரு ஓட்டத்தால் சதத்தை தவற விட்டார்.
அவர் 92 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 99 ஓட்டங்களை பெற்று சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 3ஆவது சதத்தை தவறவிட்டார்.
பின்னர் களத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த திரிமானவுடன் சந்திமால் ஜோடி சேர்ந்தார். திரிமான ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களையும் சந்திமால் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனையடுத்து இலங்கை அணி 36.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-–0 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது.
முதலாவது போட்டியின்போது பந்துவீச்சுக்கு நேரத்தை அதிகமாக எடுத்துக்கொண்டதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜெசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் இன்றை போட்டியில் அவர் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக மார்லன் சேம்வேல் அணியை வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.