எஸ்.எம்.அறூஸ்
முஸ்லிம்களின் உரிமைகளை வலியுறுத்தி தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் அமைப்பினால் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்களும்,சிவில் சமூக அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
இதில் முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு உட்பட சிவில் சமூக அமைப்புக்களின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் பெருந்திரளான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு சுலோசகங்களை ஏந்தியவாறு கோசம் எழுப்பியவாறு பல்கலைக்கழக கலைப்பீட முன்றலில் இருந்து பேரணியாக பல்கலைக்கழக முன்றலை வந்தடைந்தனர்.
இங்கு முஸ்லிம்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சுலோகங்களை ஏற்தியவாறு கோசங்களை எழுப்பினர். முஸ்லிம் மஜ்லிஸ் தலைவரினால் முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. அத்தோடு சிரேஸ்ட விரிவுரையாளர் பாசில் அவர்களிளால் விசேட உரை ஒன்றும் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள யுத்தக் குற்ற விசாரணையை 1985ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும்.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தையும் உள்வாங்கவேண்டும். வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ.நா. விசாரணை செய்ய வேண்டுமென்பதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தவேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும். வடபகுதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவை துரிதமாக அமைக்க வேண்டும்.
வடமாகாணத்தில் வனப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
‘வடமாகாணசபையே ஏன் முஸ்லிம்கள் விடயத்தில் மௌனம்?’, ‘ஐக்கிய நாடுகள் சபையே ஏன் பாரபட்சம்?’ ‘முஸ்லிம் அரசியல் தலைமைகளே ஒன்றுபட்டு ஒன்றைச் சொல்லுங்கள்’, ‘முஸ்லிம்களை இருண்ட யுகத்துக்கு மீண்டும் தள்ளிவிடாதே’, ‘மத வன்முறையினால் பாதிக்கப்பட்ட அளுத்கம முஸ்லிம்களுக்கான நியாயாம் எப்போது?’ போன்றவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவண்ணம் இவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.