ஜனாதிபதியை விசாரணை செய்ய முடியும் : பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவிப்பு !

maithri , sri bawan
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவித்தார்.

உயர்நீதிமன்றில் நேற்று முன்னெடுக்கப்பட்ட வழக்கொன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபத்தை அடுத்தே பிரதம நீதியரசர் இந்த அறிவித்தலை விடுத்தார். 

 

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் மோசடி இடம்பெற்றதாக சிங்கப்பூரின் குளோபல் ரிஷோஸ் இன்டர்னெஷனல் (தனியார்) நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போது பிரதிவாதிகளில் ஒருவராக ஜனாதிபதியை குறிப்பிட்டுள்ள குறித்த மனுவை நிராகரிக்குமாறு, பிரதிவாதி தரப்பால் முன் வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபத்தை அடுத்து அதற்கு தீர்ப்பளிக்கையிலேயே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

இது தொடர்பிலான வழக்கு நேற்று காலை 10.00 மணியளவில் உயர் நீதிமன்றில் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் தலைமையில் நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 

வழக்கின் பிரதிவாதிகளாக லங்கா கோல் கம்பனி நிறுவனம் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை என 75 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

 

சிங்கப்பூரின் குளோபல் ரிஷோஸ் இன்டர்னெஷனல் (தனியார்) நிறுவனம் தாக்கல் செய்த குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற குறைந்த டென்டரை தாமே முன்வைத்ததாகவும் எனினும், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 101 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரிய நிறுவனம் ஒன்றுக்கு அந்த டென்டர் வழங்கப்பட்டதாகவும், தமது நிறுவனத்திற்கே டென்டரை வழங்க வேண்டும் என, அரச தொழில்நுட்ப மதிப்பீட்டு சபை பரிந்துரை செய்திருந்த போதிலும், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட டென்டர் சபை பிரதிவாதிகளுக்கு அதனை வழங்கியதாகவும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

 

இதனால் இந்த விடயத்தில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு பெற்றுத் தருமாறும் மனுதாரரான குளோபல் ரிஷோஸ் இன்டர்னெஷனல் (தனியார்) நிறுவனம் சார்பில் கோரப்பட்டிருந்தது. 

 

இந்த டென்டர் நடைமுறையின் போது 2.2 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச் சாட்டும் எழுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டமைக்கு நேற்று மன்றில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. 

 

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக வழக்கொன்றை நடத்திச் செல்ல முடியாது எனவும் அதனால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் பிரதிவாதிகள் தரப்பில் அடிப்படை ஆட்சேபனை முன்வைக்கப்பட்டு வாதிடப்பட்டது. 

 

எனினும் அந்த வாதத்தை பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் நிராகரித்த நிலையில் நாட்டின் ஒரு அமைச்சர் என்கின்ற முறையில் ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை முன்னெடுக்க முடியுமென்று தெரிவித்தார். 

 

இதனையடுத்து முன் வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த பிரதம நீதியர்சர் ஸ்ரீபவன் தலைமையிலான மூவர் கொன்ட நீதியரசர்கள் குழு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என தீர்மானித்தது. 

 

அத்துடன் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேரையும் அன்றைய தினத்தில் உயர் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதியரசர்கள் குழு அறிவித்தல் விடுத்தது. 

 

எவ்வாறாயினும் இது தொடர்பில் எதிர்ப்புக்கள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின் நேற்றிலிருந்து மூன்று வாரங்களுக்குள் அவற்றை சமர்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட நீதியரசர்கள் குழு, அவ்வாறு தாக்கல் செய்யப்படும் ஆட்சேனைகளுக்கு எதிரான வாதங்களை அதிலிருந்து ஒருவாரத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என நிர்ணயம் செய்தது. 

அத்துடன் இந்த மனு மீதான விசாரணைக்கு எதிராக எந்தவொரு இடைக்கால தடை உத்தரவும் விதிப்பதில்லை எனவும் மன்று தீர்மானித்தது.