மத்திய கிழக்கு நாடான லெபனானில் நைட் கிளப் ஒன்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 அதிகாரிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் பெய்ரூட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜோனியே நகரின் நைட் கிளப் ஒன்றில் நேற்று லெபனான் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் அதிகாரிகள் சோதனை நடத்தினர். போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் தப்பியோடிய குற்றவாளிகள் இருவரை கைது செய்வதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனையின் போது அதிகாரிகள் மீது திடீரென குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ராணுவ போலீசார் சார்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கடும் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். 2 இளம் பெண்கள் உட்பட 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நைட் கிளப்பிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.