இளைஞர்களின் தேவைகளை நிறைவேற்ற என்னை அர்ப்பணிப்பேன்; இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர் தில்சாத் உறுதி!

அஸ்லம்
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டால் எமது பிரதேச இளைஞர், யுவதிகளின் தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி சாரணருமான ஏ.எம்.எம்.தில்சாத் தெரிவித்தார்.
D - Copy
காஷ்மீர் மக்களின் விடுதலைக்காக ஐ.நா. உதவ வேண்டும் எனக் கோரி சாய்ந்தமருது பிரதேசத்தில் நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டை நிகழ்வுக்கு தலைமை வகித்து பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது;
“காஷ்மீர் மக்கள் கடந்த 25 வருடங்களாக தமது உரிமைகளை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது அடிமை வாழ்வுக்கு விடிவு கிடைக்க வேண்டும். இது விடயத்தில் ஐக்கிய நாடு சபை உடனடியாக தலையிட்டு தீர்வு பெற்றுகொடுக்க முன்வர வேண்டும்.
காஷ்மீர் சகோதரர்களின் பிரச்சினைகளை எமது மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் எமது மக்களின் ஒட்டு மொத்தமான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதுடன் ஐ.நா.வுக்கு பாரிய அழுத்தங்களை கொடுப்பதற்கும் இந்த கையெழுத்து வேட்டை ஊடாக முனைகின்றோம்.
இறைவனின் நாட்டமும் நண்பர்களின் ஆதரவும் கிடைத்து நான் ஓர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் உலகின் பல்வேறு பாகங்களிலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்ற இத்தகைய நெருக்கடிகள் தொடர்பில் குரல் எழுப்புவேன் என்பதுடன் எமது பிரதேச இளைஞர், யுவதிகளின் குரலாகவும் ஒலிப்பேன்.
அத்துடன் எமது இளைஞர், யுவதிகளின் தேவைகளை நிவர்த்திப்பதற்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்கவும் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்” என்றும் குறிப்பிட்டார்.