கலை,இலக்கியம்,ஊடகம் சார்ந்த சிறப்பான பங்களிப்புக்காக ‘தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த விருது’ சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜனூஸ் பெற்றுக் கொண்டார்

 

 

-எம்.வை.அமீர்- 

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  “தலைவர் அஷ்ரப்  நினைவு நிகழ்வு 2015” (LACE- 2015) எனும் தலைப்பில் மாபெரும்  இளைஞர் மாநாடும்,  இளைஞர்கள் கெளரவிப்பு நிகழ்வும்   2015-10-31 திகதி  சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் சிறந்து பிரகாசிக்கும் இளைஞர்களுக்கான ‘தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த விருது’ வழங்கும் நிகழ்வில் கலை,இலக்கியம்,ஊடகம் சார்ந்த சிறப்பான பங்களிப்புக்காக ‘தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த விருது’ சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜனூஸ் சம்சுதீன் பெற்றுக் கொண்டார்.

5_Fotor

சாய்ந்தமருதில் சல்மா- சம்சுதீன் தம்பதியினருக்கு சிரேஷ்ட புதல்வனாக பிறந்தார் ஜனூஸ்.ஆரம்பக்கல்வி சாய்ந்தமருது கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் பயின்றார். இயல்பிலேயே பாட்டானார் வழியில் கலைக்குடும்பத்தில் பிறந்த ஜனூஸ் மிக இள வயதில் தன்னையும் கலைத்துறைக்குள் ஈடுபடுத்திக் கொண்டார். 

 

2005 இல் இலங்கையின் முதல் தர தனியார் வானொலி சக்தி எப்.எம் இல் இணைந்து 2009 வரை அங்கும் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தினார். தனது எழுத்தில் உருவான நாடகம், குறு நாடகம்,கவிதை, சிறுகதை என கிராமிய வாய் மொழி இலக்கியங்களை பரந்துபட்டளவில் வானொலியில் ஒலிபரப்பாக்கம் செய்ததில் ஜனூஸின் பங்களிப்பு அளப்பரியது.

 

மேலும், அண்மையில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜையான இயக்குனர் சுபா இயக்கும், இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் HO– USE OF MY FATHER திரைப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடித்து சர்வதேச ரீதியிலும் தனது திறமையை அடையாளப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கவிஞர், இயக்குனர், நாடக ஆசிரியர், ஒலி-ஒளிபரப்பாளர்,  நடிகர், பாடலாசிரியர் என பல தளங்களில் ஜனூஸ் அவர்களின் கலை இலக்கியப் பணி விரிந்து செல்கிறது.

 

தொழில்

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனங்களில் பகுதி நேர அறிவிப்பாளராக பணி புரிந்து கொண்டிருக்கிறார் ஜனூஸ் சம்சுதீன்.

 

ஜனூஸ் சம்சுதீன் கவிதை,பாடலாக்கம்,சிறுகதை,நாடகம்,குறும்படம்,நடிப்பு,அறிவிப்புத் துறை என பல தளங்களில் இன்று பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

 

இதுவரை இலங்கையின் தேசிய வானொலிகளில் எஸ்.ஜனூஸின் 15 க்கும் மேற்பட்ட சமூக நாடகங்கள் ஒலிபரப்பாகி நேயர்களின் வரவேற்பை பெற்றிருக்கின்றன. மேலும், எஸ்.ஜனூஸ் எழுதிய பல பாடல்கள் இலங்கையின் தேசிய வனொலி தொலைக்காட்சிகளில் ஒலி-ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

ஜனூஸின் கலை இலக்கியத் துறை பங்களிப்புகள்

 

# 2009 ஆம் ஆண்டு எஸ்.ஜனூஸ் இன் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த சுனாமிக்கு பின்னரான மக்களின் மன உணர்வுகளை சித்தரிக்கும் பெத்தம்மா திரைப்படம்.

 

#2010 இல் பதியம் குறும்படம்

 

#2012 இல் எஸ்.ஜனூஸின் தாக்கத்தி கவிதைத் தொகுதி வெளிவந்து பலரின் வரவேற்பை பெற்றது.

 

#2013 இல் ‘வை திஸ் கொலவெறி’ குறும்படம்.

  இது சர்வதேச ரீதியில் விருதையும் பணப்பரிசையும் பெற்றது.

 

# நவீன இலக்கியத்தில் புது முயற்சியாக 2014 இல் எஸ்.ஜனூஸின் ’குரலாகி’ கவிதை ஒலி-ஒளி இறுவட்டு வெளிவந்து- சர்வதேச ரீதியில் பலரின் கவனத்தை ஈர்த்தது.

 

#வெகு விரைவில் எஸ். ஜனூஸின் படைப்புகளாக

 தென்னிந்தியாவின் புகழ் பூத்த கவிஞர் மு.மேத்தாவின் ஆசியுரையுடன் ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதைத் தொகுதியும்- மற்றும் ‘இதயத்தின் இடுகைகள்’ எனும் தலைப்பில் ஜனூஸின் ’பேஸ்புக்’ பதிவுக் கட்டுரைகளும் நூலாக வெளிவரவுள்ளன.

 

இளம் வயதில் தனது அயராத கலை இலக்கிய முயற்சிகள் சார்ந்து பலவிருதுகளையும்,பட்டங்களையும், பரிசுகளையும் பெற்றுள்ள எஸ்.ஜனூஸ் இன்றுகளில் எமது பிராந்தியத்திற்கும் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த விருதுக்கும் பெருமை சேர்க்கிறார்.