இந்நாள் – முன்னாள் ஜனாதிபதிகளை ஒற்றுமைப்படுத்த பகிரதப் பிரயத்தனம்!

sri-lanka-11dec

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்து, அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய முயற்சியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார். 

 இதற்காக எதிர்வரும்; மே மாத வெசாக் உற்சவத்தின் பின்னர், அவ்விருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே வெல்கம எம்.பி குறிப்பிட்டார்.  அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இந்த பேச்சுவார்த்தைக்கான திகதியொன்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுக்கித் தருவார் என தான் நம்புவதாக’ கூறினார். 

 அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறாமைக்கு காரணம் குறித்த தினத்தில், மஹிந்த ராஜபக்ஷவால் கலந்துகொள்ள முடியாமல் போனமையே எனவும் அவர் கூறினார். 

 இதேவேளை, நிதி மோசடி விசாரணைப் பிரிவிலுள்ள புதிய பொலிஸ் பிரிவு தொடர்பில் ஆராய்ந்து, அது தகுதியற்றதாயின் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கூறினார். 

 மேலும் நிதி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய வங்கி ஆளுநரை, அப்பதவியிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் மனுவொன்றைக் கையளித்ததாகவும் பந்துல குணவர்தன எம்.பி, இதன்போது மேலும் கூறினார்.