எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் இன்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்த எகிப்து மீட்பு படை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. 17 குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் மந்திரிகள் அடங்கிய அவசரகால குழுவை விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக செல்லும்படி புதின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் அவசரகால மந்திரி விளாடிமிர் பச்கோவ், போக்குவரத்து மந்திரி மக்சிம் சோகோலோ மற்றும் மீட்புக் குழுவினர் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.