ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்த லோதா கமிட்டி விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.
லோதா கமிட்டி தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்திய கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொண்டது. 2016, 2017–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்காது என்றும் அதற்கு பதில் இரண்டு புதிய அணிகள் விளையாடும் என்றும் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதையடுத்து புதிய அணிகள் விரைவில் தேர்வு செய்யப்படுகிறது. சென்னை, ராஜஸ்தான் அணிகளில் உள்ள வீரர்கள் அனைவரும் ஏலம் விடபடுவார்களா? அலல்து அந்த அணிகளின் வீரர்கள் புதிய அணிக்கு செல்வார்களா? என்று கேள்விக்குறி நிலவியது.
இதில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் 2 புதிய அணிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 5 பேரில் அதிகபட்சமாக 4 இந்திய வீரர்கள் இருக்கலாம். மற்ற வீரர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள்.
அதன்படி சென்னை அணியில் டோனி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, மெக்குல்லம் ஆகியோர் நேரடியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஐ.பி.எல்.லின் புதிய 2 அணிகளின் விவரம் மும்பையில் வருகிற 9–ந்தேதி நடக்கும் கிரிக்கெட் வாரிய கூட்டத்துக்கு பிறகு அறிவிக்கப்படும்.