இதன் அரசியல் பின்னணி என்ன?
வட மாகானத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் கடந்து ஓடிவிட்டது. ஆனால் இன்னும் அம்மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு கிடைக்கவில்லை. மாறாக அந்த அப்பாவி அகதி மக்களை வைத்து அரசியல் செய்தவர்களெல்லாம் இன்று கோடீஸ்வரர்களாகி விட்டார்கள்.
வடமாகானமானது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் குடாநாடு உட்பட பெரும்பாலான பிரதேசங்கள் தமிழீழ விதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அங்கு பூர்வீகமாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்போது திடீரென குறுகிய கால அவகாசமாக இருபத்திநான்கு மணிநேர அவகாசம் வழங்கப்பட்டு முழு வடமாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களையும் வெளியேறும்படி ஒலி பெருக்கி மூலம் விடுதலைப் புலிகளினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நிராயுதபாணிகளான முஸ்லிம் மக்கள் செய்வதறியாது புலிகளின் வேண்டுகோளுக்கு கட்டுப்பட்டு தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த வீடுகள், அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என அனைத்தையும் விட்டு விட்டு, சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தவர்களாக மன்னார், யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டத்திலிருந்து வெளியேறி வட மேல் மாகாணத்தின் வடமாகாணத்தை அண்டிய பிரதேசங்களில் அகதிகளாக குடியேறினார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருக்கும் அவர்களது ராணுவ நிலைகள் மீது ஸ்ரீ லங்கா விமானப்படையினர் துல்லியமாக வான் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதல்களுக்கு முஸ்லிம்களிடம் இருந்தே தகவல்கள் ஸ்ரீ லங்கா அரச புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டது எனவும், முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்துக்கு புலிகளினால் காரணம் கூறப்பட்டது. ஆனால் புலிகளின் ராணுவ நிலைகளின் காட்டிக்கொடுப்புக்கு புலிகளுக்கு எதிரான ஏனைய தமிழ் இயக்கங்களே காரணம் என்ற எதிர் வாதமும் அப்போது முன்வைக்கப்பட்டது.
2009 இல் முள்ளியவாய்க்கலுடன் முடிவுற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசின் இறுதி யுத்தத்தின் போது இடம் பெயர்ந்த பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இரண்டு மூன்று வருடங்களுக்குள் மீள தங்களது சொந்த இடங்களிலும், சொந்த பிரதேசங்களிலும் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால் இருபத்தைந்து வருடங்கள் பூர்த்தியாகியும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் மீளவும் குடியமர்த்தப்படாமைக்கு காரணம் என்ன? தமிழ் அகதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் சிறு தொகையினர்களே.
மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியிலேயே புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தியதுதுடன் அதனால் இடம்பெயர்ந்த பல லட்சக்கணக்கான தமிழ் அகதிகள் குறுகிய ஆண்டுகள் இடைவெளிக்குள் மீளவும் குடியமர்த்தப்பட்டபோது, மகிந்தவின் ஆட்சியில் செல்லப்பிள்ளயாகவும், கதாநாயகனாகவும், சுயமாக தீர்மானம் எடுத்து இயங்கக்கூடிய உச்ச அதிகாரமுள்ள அமைச்சராக மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் காணப்பட்டார்.
லட்சக்கணக்கான தமிழ் மக்களை மீளவும் குடியமர்த்துவதில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பங்களிப்பு மிகவும் பிரபலமாக அன்றைய ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் பசில் ராஜபக்சவுடன் இணைந்து “வடக்கின் வசந்தம்” என்ற போர்வையில் வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அன்று தலைப்புச் செய்திகளாக காணப்பட்டது.
இத்தனைக்கும் மகிந்த அரசில் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்த மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகளில் ஒருவராவார். எனவே சாதாரண மக்களின் அகதி வாழ்வில் உள்ள வலி என்ன என்பதனை அவர் அறியாமல் இருக்க முடியாது.
சகலதையும் இழந்து சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்த தமிழ் அகதிகளை மீள குடியமர்த்துவதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் பல லட்சக்கணக்கான தமிழ் அகதிகளை மீள குடியமர்த்துவதில் காட்டிய அக்கறையும், ஆர்வமும், நீண்ட காலமாக அகதிகளாக இருந்துவருகின்ற சில ஆயிரக்கணக்கான தனது சொந்த மக்களை மீளவும் குடியமர்த்துவதில் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன?
மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும்போதுதான் அந்தப் பிரச்சினைகளை மக்களிடமும், ஊடகங்களிலும் கூறிக்கூறி இன்னும் இன்னும் அதனை பிரச்சினையாக்கி தங்களது அரசியல் வாழ்க்கையை கொண்டுபோக முடியும் என்பது சில அரசியல் வாதிகளின் தந்திரோபாயமாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டால் தேர்தல்கள் வரும்போது மக்களிடம் எதனைக் கூறுவது? இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே!
வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் மக்களின் வீடுகளில் மாவீரர் குடும்பங்களை புலிகளினால் குடியமர்த்தியதனால்தான் மீளவும் சொந்த இடங்களுக்கு முஸ்லிம் மக்களை குடியமர்த்த முடியவில்லை என்றால் அந்த வாதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களை அவர்களது சொந்த வீடுகளில் மீண்டும் குடியமர்த்தவில்லை. மாறாக அவர்களது பிரதேசத்தில் உள்ள அரச நிலங்களிலேயே மீள்குடியமர்த்தப்பட்டனர். இவர்களது இடங்களில் இராணுவத்தினர் தங்களது முகாம்களை அமைத்திருந்தததே இதற்கு காரணமாகும்.
அதேபோல வடமாகாணத்தில் ஏராளமான அரச நிலங்கள் காணப்படுகின்றது. அந்த அரச நிலங்களில் முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களை பிறந்து வளர்ந்த சொந்த ஊரிலாவது குடியமர்த்தியிருக்கலாம். இது அன்றைய மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஒரு பெரிய விடயமல்ல.
எனவே அன்று ரிசாத் பதியுதீன் அவர்கள் தனது கையில் அத்தனை அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு வடமாகான முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதில் ஆர்வம் காட்டாது இருந்து விட்டு, இன்று மீள்குடியேற்ற அமைச்சரை பார்த்து வேண்டுகோள்விடுப்பதும், ஊடகங்களில் வீராப்பு அறிக்கைகளை விடுவதும், மீண்டும் வடமாகான முஸ்லிம் மக்களை ஏமாற்றும் செயலே அன்றி வேறு ஒன்றுமில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது