ஏ.அர்சாத்
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அரசியல் தாகம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியே தவிர மாகாண அமைச்சுப் பதவியல்லஇவ்வாறு முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பின் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ரி .ஆப்தீன் தெரிவித்தார்.
முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பின் விசேட உயர்பீடக்கூட்டம் நேற்றிரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்றபோது இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே தவிசாளர் ஆப்தீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் வழங்கப்படும் என்று பகிரங்கமான வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. மக்களும் பலமாக நம்பியிருந்தார்கள். ஆனால் இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பதிலாக மாகாண அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
மக்களின் தாகமும்,எதிர்பார்ப்பும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிதான். 35 வருடகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் அரசியல் அநாதையாக விடப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேசம் அபிவிருத்தியிலும், கல்வி வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
தேசிய அரசியலில் தமக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் பல்வேறு வகையான அபிவிருத்தி செயற்பாடுகளில் அட்டாளைச்சேனைப் பிரதேசதம் பின்தங்கிய நிலையில் இருந்ததை நமது மக்கள் நன்கு அறிவார்கள். காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து அந்தக்கட்சிக்கு பலம் சேர்த்தவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள்.
மக்களின் தாகம் இவ்வாறு இருக்க மாகாண அமைச்சை பெற்றுக் கொண்ட விடயம் கவலை அளிக்கின்றது. தனி நபர்களும்,தனி பிரதேசங்களும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அலங்கரித்திருக்கின்ற நிலையில் அட்டாளைச்சேனை மண் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அலங்கரிப்பதற்கு தகுதியில்லையா?
நமக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைப்பதற்கு காலங்கனிந்து வந்த நிலையில் என்ன காரணத்தை வைத்து அதனை இல்லாமலாக்கினார்களோ தெரியவில்லை. அட்டாளைச்சேனை மண் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத்தான் எதிர்பார்த்திருக்கின்றது. அந்தப் பதவியை அடைவதற்கான ஏற்பாடுகளை நமது இளைஞர் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அட்டாளைச்சேனை மக்களின் தாகத்தையும். அவர் மீதான நம்பிக்கையையும் காப்பாற்றி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அட்டாளைச்சேனை இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்கான எண்ணத்தை உருவாக்க வேண்டும். மக்களை பகடைக்காய்களாக மாற்றுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இளைஞர் மாகாநாட்டை நடத்தி நமக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான கோரிக்கையை வலியுறுத்தவுள்ளோம் என்றார்.