சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதி பாலத்தடியில் குவியும் குப்பைகளால் மக்கள் அசௌகரிகம் !

 

எம்.வை.அமீர் 

 

கல்முனை மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் சாய்ந்தமருதின் பல பிரதேசங்களிலும், மாநகரசபை கழிவகற்றும் விடயத்தில் சரியான முகாமைத்துவம் இல்லாமையினாலும் மக்களின் அசிரத்தையினாலும், சுகாதாரத்துக்கும் போக்குவரத்துக்கும் அச்சுறுத்தலாகும் விதத்தில் கழிவுகள் தேங்கிக் கிடப்பதாகவும் குறித்த கழிவுகளை சரியான முகாமைத்துவத்தின் கீழ் உடனடியாக அகற்ற கல்முனை மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாய்ந்தமருது பத்தாம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதவானும் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான  எம்.எம்.உதுமாலெப்பை கேட்டுள்ளார்.

IMG_0123_Fotor

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதாலும் மக்கள் அக்கறையற்ற விதத்தில் குப்பைகளை வீசுவதாலும் பிரதேசத்தின் சுகாதாரத்துக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த அச்சுறுத்தல் நிலவுகிறது. கல்முனை மாநகரசபை கழிவுகளை அன்றாடம் அகற்றுகின்ற போதிலும் அது சரியான முகாமைத்துவ அடிப்படையில் அகற்றப்படுவதாக தெரியவில்லை என்றும்  கழிவுகளை சேகரிப்பதற்கு வருகை தரும் வாகனங்கள் எந்த எந்த தினங்களில் வருகை தரும் என்றும், வாகனங்கள் வருகை தருவதை மக்கள் அறிந்து கொள்வதற்காக கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களுக்கு ஒலி எழுப்பக்கூடிய வசதிகளையும் கல்முனை மாநகரசபை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் குறித்த கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களுடன் அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர் வருகைதர வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார். 

 

சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதி பாலத்தடியில் குவியும் குப்பைகளால் மக்கள் மிகுந்த அசௌகரிகமடைவதாக தெரிவித்த எம்.எம்.உதுமாலெப்பை, கடந்த காலங்களில் கழிவுகளை குறித்த இடத்தில் கொட்டி வந்த போதிலும் இப்போது அவ்விடத்தில் சமுர்த்தி சங்கம் தேசிய மரநடுகை திட்டத்தின் கீழ் மரங்களை வளர்ப்பதற்கும் குறித்த இடத்தில் கழிவுகளை போடாமல் தவிர்ப்பதர்க்குமாக அந்த இடத்தில்  வேலிகள் இட்டுள்ளனர். இருந்த போதிலும் மக்கள் அவர்களது கழிவுகளை ( குழந்தைகளின் மலசல பம்பஸ் கழிவுகள்,பெண்களின் கழிவுகள் வீட்டு கழிவுகள்) மாநகரசபை வாகனங்கள் வந்து சேகரிக்கும்வரை காத்திருக்காமல்   நடுவீதியில் வீசியுள்ளனர். பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் ஏனைய தேவைகளுக்கு மக்கள் இவ்வீதியால் பயணம் செய்வதால் துர்நாற்றம் வீசும் குறித்த கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகரசபை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

IMG_0131_Fotor

அதேவேளை நீர் இணைப்புக்காக பல இடங்களில் வீதிகள் வெட்டப்பட்டுள்ளன. குறித்த வீதிகளை வெட்டுவதற்காக மாநகரசபைக்கும் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கும்  மக்கள் பணம் கட்டியிருந்த போதிலும் மாநகரசபையோ அல்லது  மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களமே அவைகளை திருத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்த அவர் அவைகளையும் திருத்த கல்முனை மாநகரசபையும் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களமும்  உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

சாய்ந்தமருதில் அதிகமான கொங்கிரீட் வீதிகளில் நீர் இணைப்புக்காக வெட்டப்பட்ட குழிகள் பள்ளமாக உள்ளதால் மக்கள் அபாயகரமான பாதிப்புக்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.