முஸ்லிம் காங்கிரசின் உதயத்துக்கு முன்பு அரசியல் தலைமைதத்துவமும், வழிகாட்டலுமின்றி சிங்கள பெரும் தேசியக் கட்சிகளிலும், தமிழ் ஆயுத இயக்கங்களிலும் முஸ்லிம்கள் சிதறிக்கிடந்தனர். அப்போது இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் என்ற வரையறைக்குள், தமிழர் என்ற தேசிய இனத்துக்குள் முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரைக்கும் சிங்கள அரசுக்கும், தமிழ் தரப்புக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டது. ஆனால் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் முஸ்லிம்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கி இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற உண்மையை உலகின் காதுகளுக்கு எடுத்துரைத்து வெற்றி கண்டார்.
மு. காங்கிரசின் அரசியல் கொள்கையானது தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். சிங்கள கட்சிகளிலும், தமிழ் ஆயுத இயக்கங்களிலும் சிதறிக்கிடந்த முஸ்லிம் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் என்ற மரத்தின்கீழ் ஒற்றுமை படுத்தப்பட்டனர்.
அத்துடன் அபிவிருத்தி சம்பந்தமாக எந்தவித வாக்குறுதிகளையும் மு.கா. வழங்கவில்லை. மாறாக அபிவிருத்தி செய்யமாட்டோம், தொழில் வழங்க மாட்டோம். இவைகள் அரசின் கடமை என்றுதான் கூறப்பட்டது. அபிவிருத்தியை காட்டி முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளயிட்டுக் கொண்டிருந்த சிங்கள அரசியல் கட்சிகளின் முஸ்லிம் முகவர்கள் அரசியலில் இருந்து மக்களால் நிராகரிக்கப்பட்டனர். இது முஸ்லிம் காங்கிரசின் கொள்கைக்கு மக்கள் வழங்கிய ஆணையாகும்.
இனப்பிரச்சினை தீர்வின்போது இணைந்த வட-கிழக்கு அல்லது கிழக்கு, அல்லது தென்கிழக்கு என்ற ரீதியிலேயே முஸ்லிம்களுக்கு சுய ஆட்சியுடன் கூடிய அதிகார அலகை பெறுவதனை கொள்கயாகக்கொண்டே முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முஸ்லிம்களின் பாதுகாப்பே பிரதானமானதாகும்.
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது தமிழ் தரப்பினர் எந்த கொள்கையில் தங்களது பயனத்தை ஆரம்பித்தனரோ அதே கொள்கையிலேயே எந்தவித தளம்பளுமின்றி இன்றுவரை அதனை அடையும்வரைக்கும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அதுவரைக்கும் தமிழ் மக்கள் அடைந்த இழப்புக்களும், சொல்லொண்ணா துயரங்களையும் எழுதி முடிக்க முடியாது.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே நோக்கத்துடன் இன்று அது பயனித்துக்கொண்டிருக்கின்றதா? அதற்கு தடையாக இருப்பவர்கள் யார்? என்பதுவே இன்றைய கேள்வியாகும். யாரால் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அவராலேயே அதன் அழிவுக்கும் அத்திவாரமிடப்பட்டது என்ற உண்மையை கூறினால் அது வேப்பங்காய் போன்றுதான் இருக்கும்.
ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரசின் கொள்கையினையும், அதன் தலைவரையும் எதிர்த்தவர்கள் பலர் 1994 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரப் அவர்கள் அமைச்சர் பதவியை பெற்றதன் பின்பு பணம் சம்பாதிக்கவும், பதவிகளை பெறவும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டனர். அது இன்று வரையில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
இன்று முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற பலருக்கு அதன் கொள்கை, மற்றும் என்ன நோக்கத்துக்காக மு.கா. ஆரம்பிக்கப்பட்டது என்ற சிறிதளவு அறிவுவோ, அல்லது உணர்வோ இல்லை. மு.கா. க்கு முஸ்லிம் மக்களின் அதிக பட்ச ஆதரவு இருப்பதனால் அதனை வைத்து தங்களது அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் பொருட்டு பதவியை பெறுதல், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தல், வரலாற்றில் தடம்பதித்தல் போன்ற நோக்கங்களுக்காக சுயநலவாதிகள் பலர் மு. கா. க்குள் ஊடுருவியுள்ளனர். தங்களது சுயரூபத்தை மக்களுக்கு காட்டிக்கொள்ளாமல் தந்திரமாக காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காத போது மு.கா. க்கும் அதன் தலைவருக்கும் துரோகம் செய்துவிட்டு மு.கா. சில் இருந்து வெளியேறும்போதுதான் இவர்களது சுயரூபம் மக்கள் மத்தியில் வெளிச்சம்போட்டு காட்டப்படுகின்றது. அதுவரைக்கும் இவர்கள் சமூக காவலர்கலாகவே கருதப்படுகின்றனர். இப்படிப்பட்ட சுயநலவாதிகளை வைத்துக்கொண்டு கட்சியை வழிநடத்துவதில் தலைவர் எதிர்கொளுகின்ற இடையூறுகள் ஏராளம்.
தங்களது அற்ப சுயநல பதவியினை அடைந்து கொள்வதற்காக இவர்களால் பாவிக்கபடுகின்ற இறுதி ஆயுதம்தான் பிரதேசவாதமாகும். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக தங்களது ஊரை கூறிக்கொண்டு, ஊருக்கு எம்பி பதவி அல்லது வேறு பல பதவிகளை வேண்டிக்கொண்டு ஒற்றுமையாக இருக்கும் முஸ்லிம்களை பிரதேச ரீதியாக பிரித்தாள முற்படுகின்றார்கள்.
இந்நாட்டிலே சிறுபான்மையினராக வாழும் நாங்கள் ஒற்றுமையாக ஒரே கொள்கையின்கீழ் பயணிக்கும் போதுதான் எங்களது அரசியல் உரிமையினை அடைந்து கொள்ள முடியும். சுயநலவாதிகளின் பதவி மோகத்துக்காக எங்களது சமூகத்தையும், கட்சியினையும், தலைவரையும் அடகு வைக்க முடியாது. நாங்கள் பிரிந்து செல்லும்போது பலம் இழந்தவர்களாக எங்களது சமூகத்துக்கு எதனையும் சாதிக்க முடியாதவர்களாகி விடுவோம் இதனால் நஷ்டம் அடைவது நாங்களே. மாறாக நன்மை அடைவது பேரினவாதிகள். என்ற உண்மையினை இந்த பதவி மோகம் பிடித்த சுயநல வாதிகளிகளுக்கு புரிய வைப்பது கடினம்.
முஸ்லிம் காங்கிரசை பிளவு படுத்துவதற்கு வெளிச்சக்திகள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருப்பது வழமை. இன்று மாகான அமைச்சர் பதவி சகோதரர் நசீர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை வைத்து அட்டாளைச்சேனைக்கு எம்பி பதவி வழங்கவில்லை என்றும், புல்மோட்டையை சேர்ந்த அன்வருக்கோ, அல்லது அக்கரைபற்று தவத்துக்கோ இந்த அமைச்சு பதவியை வழங்கி இருக்கலாம் என்றும் மு.கா. எதிரிகள் கூச்சலிடுகின்றார்கள். மு.கா போராளிகளுக்கோ, ஆதரவாலர்களுக்கோ இல்லாத அக்கறை இவர்களுக்கு எப்படி என்று ஆராய்ந்தால் இதன்மூலம் பதவி கிடைக்காதவர்களை இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரப்படுத்தி மு.கா. இலிருந்து பிரித்தெடுப்பதே இவர்களது நோக்கமாகும்.
மு.கா இலிருந்து விலகிச்சென்றால் மட்டும் எதிர்பார்த்த பதவியினை அடைந்துவிட முடியுமா? மு.கா லிருந்து பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அவசரப்பட்டு அல்லது பணத்துக்கு விலைபோய் பிரிந்து சென்றவர்கள் பலர் இன்று மீண்டும் மு.கா இல் இணைந்து கொள்வதற்காக தூதுவிட்டுக்கொண்டிருப்பதனை இன்று பதவி கிடைக்காதவர்கள் அறியாமல் இருக்க மாட்டார்கள்.
பதவியை தருபவனும் தராமல் விடுபவனும் அல்லாஹ். தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக தலைவரை பழிவாங்கும் நோக்கோடு பிரதேச ரீதியாக சமூகத்தையும், அதன் தேசிய குரலான மு.கா யையும் பிளவுபடுத்த முற்பட்டால் அதில் பாதிக்கப்படுவது தலைவர் ஹகீம் அல்ல. எமது சமூகமே. எனவே முஸ்லிம் காங்கிரசின் கொள்கையில் பயணித்து அதன் லட்சியத்தை அடைவதுவே சமூகத்தின் தேவையாகும். இதற்கு தமிழர்களின் அரசியல் பயணம் எமக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது