மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காக அரசு ஊழியர்கள் அடங்கிய நடனக் குழுவுக்கு, அம்மாநில முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
அண்மையில், அனில் கால்கலி என்ற சமூக செயற்பாட்டாளர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவுக்கு அரசு அளித்த பதிலில், பாங்காக் செல்லும் நடனக் குழுவுக்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் அளித்திருப்பது தெரியவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அந்தத் தொகையை அரசு திரும்பப் பெற வேண்டுமென்றும் அல்லது முதல்வர் பட்னாவிஸ் தனது சொந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர், வறட்சி உள்ளிட்ட விவகாரங்களுக்காக முதல்வர் நிவாரண நிதிப் பிரிவில் தனி ஒதுக்கீடு இருப்பதாகவும், நடனக் குழுவுக்கு செலுத்தப்பட்ட பணம் அந்த ஒதுக்கீட்டின் கீழ் வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நடனம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குவது விதிமீறல் கிடையாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.