தன்னிறைவான பொருளாதாரத்திற்கு அடித்தளமிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 70 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டும், இலங்கை அதன் அங்கத்துவ நாடாக இணைந்து 60 வருடங்கள் நிறைவடைவதையிட்டும் கொழும்பில் இன்று (24) நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் கூறினார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தலைமையிலான ஏனைய சர்வதேச அமைப்புகளுடனும், பிரபலமான அமைப்புகளுடனும் நட்புறவையும் ,தொடர்புகளையும் வலுவூட்டும் முயற்சிகளில் ஈடுபட நேரிட்டதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கடந்த 10 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு அமைவாக, அந்த அமைப்பின் அங்கத்துவ நாடு என்ற வகையில் அரசாங்கம் தனது பொறுப்புகளையும், கடமைகளையும் உரியவாறு நிறைவேற்றுவதை எடுத்துக் காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நல்லாட்சியின் கீழ் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதன் ஊடாக, நாட்டில் வறுமையை இல்லாதொழித்து தன்னிறைவான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கும், தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்குமான நிலையான அடித்தளத்தை இடுவதற்கான செயற்பாட்டை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.