மு.காவின் மூத்த போராளி ஹசனலி மீது சேறு பூச முனையாதீர் , தவத்துக்கு ஒரு திறந்த மடல் !

எம். எஸ். டீன்

hasan ali

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றப்பாட்டுடன் மறைந்து போன ஊர்வாதம், பிரதேச வாதம் என்பவற்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மீண்டும் தூசி தட்டிப் பார்க்க முற்படுவது இக்கட்சியின் மூத்த போராளிகளை விசனப்படுத்தியுள்ளது. இவரது பேச்சும் செயற்பாடுகளும் இக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃபின் கொள்கைகளைக் கொச்சைப்படுத்தும் செயலாக அமைகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் மாற்றுக் கட்சிக்காரர்கள் களியோடை தொடக்கம் பொத்துவில் வரை முஸ்லிம் காங்கிரஸ் யாரையும் அபேட்சகராக நிறுத்தாமல் புறக்கணித்து விட்டது என்ற வாத பேதங்களைக் கிளப்பிய போதும் குதிரை வேகத்தில் புழுதியைக் கிளப்பும் பிரசாரம் மேற்கொண்ட போதும் அவர்களுக்கு எவ்வித வலுவையும் சேர்க்கவில்லை. படுதோல்வியையே அடைய முடிந்தது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தொடர்ச்சியாக மூன்று பாராளுமன்றத் தேர்தல்களில் ஹரீஸ், பைஸல் காசீம், மன்சூர் ஆகியோரையே ஆதரித்து வந்துள்ளனர். இது மாகாண சபைத் தேர்தலுக்கும் மன்சூரைப் பொறுத்தவரை பொருந்தும்.

கடந்த 12 வருட காலமாக கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை ஊரைச் சேர்ந்த மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கே முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் வாக்களித்து வந்துள்ளனர். இது நாடறிந்த உண்மை.

நிலைமை இவ்வாறிருக்க இக்கட்சிக்குள் வந்து தஞ்சமடைந்து மூன்று வருடங்கள் கூட நிறைவடையாத நிலையில் கட்சியின் வரலாறு பாரம்பரியம் புரியாமல் மாகாண சபை உறுப்பினர் தவம் சிறு பிள்ளைத்தனமாக அறிக்கை விடுவது அவ்வளவு நல்லதல்ல.

இனி, தேசிய பட்டியல் நியமனத்துக்கு வருவோம் கட்சியின் செயலாளர் நாயகம் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட மும்முரமாக ஆர்வம் காட்டினாரே தவிர வேறு எவற்றையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், கட்சித் தலைமையினால் ஐ.தே.கட்சிப் பட்டியலில் அவரது பெயர் முதன்மையாளர்களின் முன்னுரிமைப் படித்தரத்தில் இடம்பெற்றது. தேசிய பட்டியலில் அடையாளப்படுத்தப்படுபவர்தன் மூலம் அவர்களும் சட்டப்படியான அபேட்சகர்கள் தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. 1978 ம் ஆண்டின் யாப்பின் பிரகாரம் புத்திஜீவிகளுக்கும், கனவான்களுக்கும் உரியதுதான் அந்தப் பட்டியல். உதவாக்கரைகள் தார்மீகமாக உரிமை கோர முடியாது.

கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலி தேசிய பட்டியல் தொடர்பாக வாய்திறந்ததே கிடையாது. அல்லது உங்களைப் போன்று ஊடகங்களுக்கு அறிக்கை விட்டதும் கிடையாது.

தேசிய பட்டியல் யாருக்கு வழங்க வேண்டும் என்பது கட்சியின் தலைமை எடுக்க வேண்டிய முடிவு. அவரே இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில் அவரை யாரும் நிந்திப்பது தவறானது.

களியோடை, பொத்துவில் இடைப்பட்ட ஊர்களையும் 85,000 வாக்குகளையும் பற்றிக் கூறும் நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருந்து மு.காவுக்கு கடந்த தேர்தலில் 6000 வாக்குகளைக் கூடப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது கட்சிக்குத் தெரிந்த விடயம், அங்கிருந்த வாக்குகளில் பல ஆயிரங்களை தயா கமகேயும், ரிஷாட் அணியும் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நீங்கள் தெரிவு செய்யப்படுவதற்காக பொத்துவில் தொடக்கம் மருதமுனை, சம்மாந்துறை வரை உள்ள மக்கள் வாக்களித்திருக்க இப்போது களியோடையின் தென்புறம் பற்றி பேசுகின்aர்கள்.

ஒலுவிலுக்கும் – பொத்துவிலுக்குமிடையே இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல். நkர் மற்றவர் நீங்கள் அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படும் என்று தலைவர் ஹக்கீம் கூறியுள்ளார். ஆகவே எஞ்சுவது நீங்கள்.

உண்மையாகவே நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்குள் வந்து மாகாண சபை உறுப்பினராகி மூன்று வருடங்கள் ஆகிய நிலையில் மாகாண சுகாதார அமைச்சுக்குக் குறிவைப்பது எதைக்காட்டுகின்றது என்றால் கிண்ணியாவிலிருந்து புல்மோட்டை வரை கடந்து இரண்டு தடவை மாகாண சபை உறுப்பினராக இருந்து மக்களுக்குப் பணியாற்றும் ஏ.ஆர்.அன்வரையும், அவரது மக்களுக்கும் சுமார் 70 கிலோ மீற்றர் கட்டமைப்பைக் கொண்ட பிரதேசத்துக்கும் செய்யும் துரோகமாகும்.

கட்சியின் செயலாளர் நாயகம் தானுண்டு தன் பணி உண்டு என்ற நிலையில் தன் கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது அதிகார வரம்புகள் பற்றியும் கிராமங்கள் பற்றியும் நீங்கள் அலட்டிக் கொள்வது தலைவரை நெருக்கடிக்குள்ளாக்கும் செயலாகும். கட்சியில் இணைந்த புதியவர் என்பதற்காக வழங்கப்படும் மரியாதையை நீங்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. நாட்டில் நிலவிய கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி நல்லாட்சியை ஏற்படுத்திய மக்களை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு உங்கள் அரசியலை கேள்விக் குறியாக்க வேண்டாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்த எத்தனையோ பேர் 2000ம் ஆண்டிலிருந்து பிரிந்து போயும், இந்தக் கட்சியின் சின்னம் மரம் இன்னும் ஆணி வேர் பாய்ச்சி உச்சி தொட்டு நிலைத்து நிற்கின்றது. 30 வருடங்களாக கட்சியைக் கட்டிக்காப்பதில் இரு தலைவர்களுக்கும் தோள் கொடுத்து நின்ற பெருமை ஹஸனலியைச் சாரும், நீங்கள் இந்தக் கட்சியில் ஹஸனலியின் காலத்தில் பத்தில் ஒரு பங்குக் காலத்தையாவது பூர்த்தி செய்யவில்லை. உள்ளூராட்சி தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள் உங்கள் சாதனைகளுக்கு எடுத்துக் காட்டாக அமையட்டும். நாவடக்கம் எல்லாவற்றுக்கும் நலனையே கொடுக்கும்.