உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது.
தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், உடனடியாக அதற்கு பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று பரிந்துரை செய்திருக்கிறது.
இந்த பராமரிப்புக்கு சுமார் ஆறுகோடி டொலர்கள் செலவாகும் என்றும் மதிப்பிட்டிருக்கிறது.
இந்த பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்த நான்குமுகக் கடிகாரமும் அதன் உலகப்புகழ் பெற்ற மணியோசையும் பல மாதங்களுக்கு நிறுத்தப்படும்.
1859 ஆம் ஆண்டு இந்த மணிக்கோபுரம் கட்டப்பட்ட காலத்தில் இருந்து மிக நீண்டநாட்களுக்கு அதன் மணியோசை நிறுத்தப்படும் காலமாக இந்த பராமரிப்புக்காலம் அமையக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
இந்த கடிகாரத்தின் நீண்ட உலோக முட்களும் அதன் மணியோசை எழுப்பும் தொங்குருண்டையும் சிதிலமடைந்திருப்பதாகவும், கடிகாரத்தின் வேறு சில உலோக பாகங்களும் துருப்பிடித்து சேதமடைந்திருப்பதாகவும், இந்த மணிக்கூண்டின் கூரையில் ஓட்டைகள் ஏற்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
West Minister Palace என்று அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த மணிக்கூண்டு மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த நாடாளுமன்ற கட்டிடமுமே அவசரமாக புனரமைக்கவேண்டிய அளவுக்கு மோசமடைந்திருப்பதாகவும் இதை பராமரித்து புனரமைக்கவேண்டுமானால் 11 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் நாடாளுமன்றத்தின் நிலைக்குழு தெரிவித்திருக்கிறது.