ஒலுவில் துறைமுக காணி சுவீகரிப்புக்கு நஷ்டஈடு வேண்டும் !

oluvil harbour

எஸ்.அஷ்ரப்கான்

 

oluvil harbour
oluvil harbour

ஒலுவில் துறைமுக காணி சுவீகரிப்பு சம்பந்தமான விசாரணைத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும்படி கோரி ஒலுவில் துறைமுக நிர்மானப் பணிக்காக காணி இழந்தோர் சங்கம் பிரதமர் றணில் விக்ரமசிங்ஹவிற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

 

சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம். அன்சார் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

M.I.M. Ansar-01

ஒலுவில் துறைமுகமானது டென்மார்க் அரசின் 46.1 மில்லியன் யூரோ கடனுதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்துறைமுக அபிவிருத்தி நிர்மாணப்பணிக்காக 2008ம் ஆண்டு 48 பேர்களின் காணித் துண்டுகள் (49.5 ஏக்கர்) சட்டப்படி சுவீகரிக்கப்பட்டு அதில் 32 பேர்களின் காணித்துண்டுகளுக்கு மடடுமே 2009ம் ஆண்டு அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் நஷ்டஈடு வழங்குவதற்காக விலை மதிப்பீடு செய்யப்பட்டது.

 

ஏனையவர்களின் காணிகள் இதுவரையில் விலை மதிப்பீடு செய்யப்படவில்லை. விலை மதிப்பீடு செய்யப்பட்ட காணி உரிமையாளர்களில் 19 பேர் மட்டுமே தங்களது பொருளாதார நிலைமை, பிள்ளைகளின் கல்வி, அபிவிருத்தி, அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்திற்கொண்டும் அச்சுறுத்தல் காரணமாகவும் ஒரு பேர்ச்சஸ் காணிக்கு 30,000.00 படி நஷ்டஈட்டினை பெற்றுக் கொண்டனர்.

 

அரச விலை மதிப்பீடு அதிகூடியது என்ற யூகத்தின் அடிப்படையில் அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையினை வழங்குவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை மறுத்துவிட்டது. இது காணி சுவீகரிப்பு சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும். சட்டப்படி கிடைக்க வேண்டிய நஷ்டஈட்;டை பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் மஹிந்தவின் சர்வதிகார அரசில் பலன் கிடைக்கவில்லை.

 

இவ்விடயமாக பாதிக்கப்பட்ட மக்களால் நஷ்டஈடு வழங்கலில் அநீதி இழைக்கப்பட்டமை, அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றமை தொடர்பாக பிரதமருக்கு 2014ம் ஆண்டு மஹஜர் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2015.01.29 ஆம் திகதி ஸ்ரீ கொத்தவில் நடைபெற்ற விசாரணையின் போது விசாரணைக் குழவினரால் ‘பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கும் அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் எதிர் காலத்தில் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆகவே மேற்படி விசாரணைத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு கபினட் அனுமதியினைப் பெற்று பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு அரச விலைமதிப்பீட்டின்படி வழங்கப்பட வேண்டிய நஷ்டஈட்டினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.