போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஈழத் தமிழர் மயூரன் சுகுமார் மற்றும் அன்ரூ சான் உட்பட மொத்தம் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஈழத் தமிழர் மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்களின் நாட்டு தூதரகங்களும் தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தன.
குறிப்பாக குற்றவாளிகள் ஆன்ட்ரூ சான், மயூரன் சுகுமாரனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு குரல் கொடுத்தது. அதை இந்தோனேசிய அரசு நிராகரித்தது. போதை பொருள் கடத்தலால் நாட்டில் குற்றங்கள் பெருகி நாட்டுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி ஜனாதிபதி ஜோகோ விடோடோ மறுத்துவிட்டார்.
ஐ.நா.சபை உட்பட சர்வதேச அளவில் பலரும் தண்டனையை ரத்து செய்யுமாறு இந்தோனேசிய அரசிடம் கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது அந்நாட்டு அரசாங்கம்.