மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 418 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை 484 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலளித்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 66 ஓட்டங்களை இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.
காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் திமுத் கருணாரத்ன 135 ஓட்டங்களுடனும் டினேஷ் சந்திமால் 72 ஓட்டங்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
டினேஷ் சந்திமால் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார்.
2010 ஆம் ஆண்டின் பின்னர் ஒரே இன்னிங்ஸில் 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற இலங்கையர்கள் என்ற சிறப்பை திமுத் கருணாரத்ன மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோர் பெற்றனர்.
2010 ஆம் ஆண்டில் குமார் சங்கக்காரவும், மஹேல ஜயவர்தனவும் இந்த இலக்கை எட்டியிருந்தனர்.
திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் கடைசி 6 விக்கெட்டுகளும் 59 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டுகளையும், ஜெரோம் டெய்லர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 66 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது.