தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை கூடிய அமைச்சரவையில் பிரஸ்தாபித்தார்.
இக்கைதிகளில் ஒரு பிரிவினர் விசாரணை கைதிகளாகவும், ஒருசிலர் வழக்கு கைதிகளாகவும், பிறிதொரு பிரிவினர் தண்டனை கைதிகளாகவும் தமது வாழ்நாளில் கணிசமான பகுதியை சிறையில் கழித்து வருகின்றனர். இவர்கள் இன்று கொழும்பு, கண்டி, அநுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் உண்ணாவிரதம் இருப்பதையும், அவர்களில் சிலர் இதுவரைக்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதையும், கடந்த ஆட்சியில் நிலவிய நிலைமை நமது நல்லாட்சியில் நிலவுவதை நீடிக்க விடக்கூடாது எனவும் அமைச்சர் மனோ கணேசன் எடுத்துரைத்தார்.
அமைச்சரின் கூற்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர், நீதித்துறை அமைச்சர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோர் சட்டமாதிபரை அழைப்பித்து ஆராய்ந்து தனக்கு அறிவிக்கவேண்டும் என பணித்தார்.
இது தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரை உள்ளடங்கிய குழு தனது தலைமையில் சட்டமாதிபரை அழைத்து கலந்துரையாடி இப்பிரச்சினையை மேலும் நீடிக்க விடாது தீர்க்க வேண்டும் என்பதுவே தனது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும், 20ஆம் திகதி இது தொடர்பான முதற்கூட்டத்தை நடத்துவோம் என அமைச்சர் மனோ கணேசனிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இந்த தகவலை,; கொழும்பு சிறைசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளிடம் தெரிவித்தார்.