தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் : பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் !

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 87 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதுடன், தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

jaya
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களையும், அவர்களின் 4 படகுகளையும், இலங்கை கடற்படையினர் அத்துமீறி பிடித்துச் சென்றது குறித்து, பிரதமருக்கு தாம் கடிதம் எழுதியிருந்த நிலையில், மிகுந்த அதிர்ச்சியளிக்கும் வகையில், நாகப்பட்டினத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களையும், அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் இன்று (நேற்று) அதிகாலையில் பிடித்துச் சென்றுள்ளனர்.கடந்த 3 வாரத்திற்குள் 7-வது முறையாக, தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது நடந்த கைது சம்பவத்தையும் சேர்த்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அன்னிய நாட்டில் அவர்களை சிறை வைப்பது அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை, ஏழ்மை நிலையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கும் பேரிழப்பாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இருந்து, அப்பாவி தமிழக மீனவர்கள், அடுத்தடுத்து தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள், தமிழகத்தின் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தும் அளவுக்கான ராஜ்ஜிய நடவடிக்கைகள் மூலம் இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்களை தடுத்து நிறுத்தவேண்டும்.

கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசுக்கு எடுத்துரைத்து தமிழக மீனவர்கள் 87 பேரையும், அவர்களின் 39 படகுகளையும் உடனடியாக விடுவிக்க திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள், தூதரக அளவில் மட்டுமின்றி, உயர்நிலை அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்யும் நடவடிக்கைகள், உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். இன்று (நேற்று) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் உள்பட இலங்கை சிறைகளில் வாடும் 87 தமிழக மீனவர்களையும், அவர்களின் 39 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க பிரதமர் உறுதியான, திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.