பஞ்சாப் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது !

211939.3

 ஐ.பி.எல்., லீக் போட்டியில் சொதப்பிய பஞ்சாப் அணி, ஐதராபாத் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மொகாலியில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின.

 பஞ்சாப் அணியில் சேவக், கரண்வீர் நீக்கப்பட்டு, மனன் வோரா, ரிஷி தவான் இடம் பெற்றனர். ஐதராபாத் அணியில் ஸ்டைன், ராகுலுக்கு பதிலாக ஆஷிஸ் ரெட்டி, ஹென்ரிக்ஸ் வாய்ப்பு பெற்றனர். ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 ஐதராபாத் அணி துவக்கத்தில் திணறியது. ஜான்சன் பந்தில் ஷிகர் தவான் (1) வெளியேறினார். அதிரடியாக ஆடிய வார்னர், ஜான்சன் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். தொடர்ந்து சந்தீப் சர்மா ஓவரில் 4 பவுண்டரி விளாசினார். விகாரி (9) ஏமாற்றினார். அரைசதம் கடந்த வார்னர்(58), அக்சர் படேல் ‘சுழலில்’ அவுட்டாக சிக்கல் ஏற்பட்டது.
 நமன் ஓஜா, 28 ரன்கள் எடுத்தார். போபரா(0) சொதப்பினார். ஹென்ரிக்ஸ் (30) ஓரளவுக்கு கைகொடுத்தார். சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் ஆஷிஷ் ரெட்டி அடுத்தடுத்து 2 சிக்சர் விளாசினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. ரெட்டி(22), கரண் சர்மா(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் மடமட:
சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு ஐதராபாத் ‘வேகங்கள்’ தொல்லை தந்தனர். பவுல்ட் பந்தில் வோரா(5) அவுட்டானார். புவனேஷ்வரிடம் ஷான் மார்ஷ்(1) சரணடைந்தார். பிரவீண் குமார் ஓவரில் 3 பவுண்டரி அடித்த கேப்டன் பெய்லி(22) அதிக நேரம் நீடிக்கவில்லை. முரளி விஜய்(12) ரன் அவுட்டானார். மில்லரும்(15) கைவிட, 12.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்து தவித்தது. 
பின் விரிதிமான் சகா, அக்சர் படேல் சேர்ந்து துணிச்சலாக போராடினர். இந்த நேரத்தில் பவுல்ட் வீசிய போட்டியின் 18வது ஓவரில் படேல்(17), சகா(42) அவுட்டாக, ஆட்டம் மீண்டும் ஐதராபாத் பக்கம் வந்தது. 

 கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டன. இதில், துல்லியமாக பந்துவீசிய பிரவீண் குமார் 4 ரன் மட்டும் கொடுத்து, அனுரீத்தையும்(0) வெளியேற்றினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஜான்சன்(4), சந்தீப் சர்மா(1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் இது அணிக்கு ஐந்தாவது தோல்வி
ஐதராபாத் சார்பில் பவுல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.