எமது தலைவர் விசாரணையின் பின்னர் ஒரு நிரபராதியாக வெளியில் வருவார் !

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சிறுசிறு தமிழ் கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக சில கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். 

2146880538Untitled-1
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் பிரதித் தலைவர் யோகவேள், மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர், பொருளாளர் தேவராஜன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். 

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரசாந்தன், 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் பல்வேறுபட்ட வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. 

இந்த கைதானது அரசியல் ரீதியான கைதாகவே நாங்கள் பார்க்கின்றோம். குற்றப் புலனாய்வுத் துறையினர் எந்தவித அழைப்பும் வழங்காமல் நேற்று முன்தினம் இரவு வாழைச்சேனையில் உள்ள எமது தலைவரின் சகோதரியின் வீட்டிற்கு சென்றனர். 

குற்றப் புலனாய்வு துறையினர் என தங்களை அடையாளப்படுத்தியவர்கள் சந்திரகாந்தனை அழைத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்கள். 

அந்தவேளையில் அவர் அங்கிருக்கவில்லை.அது தொடர்பில் அறியும் பொறுட்டு அவர் நேரடியாக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்றிருந்தார். விசாரணைக்காக சென்ற அவர் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். 

ஆனால் கைதுசெய்யப்பட்டார், சரணடைந்தார் என்றவாறு செய்திகள் வெளியிடப்படுகின்றன. அவர் கைதுசெய்யப்படவில்லை. நேரடியாக சென்று விசாரணையில் பங்குகொண்டார். மேலதிக விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார். 

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையாக இருக்கட்டும் ரவி ராஜின் கொலையாக இருக்கட்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுதியாகவுள்ளது. 

எமது கட்சிக்கு சேறு பூசவேண்டும். கட்சிக்கு உள்ள வாக்கு வங்கியை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடாக இது இருந்தால் அது வெற்றியளிக்கப் போவதில்லை. 

எமது கட்சியின் தலைவர் எந்தவித குற்றமும் இழைக்காதவர். குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணையின் பின்னர் ஒரு நிரபராதியாக வெளிவரவுள்ளார். 

அப்போது அவர் மீது குற்றம்சாட்டி கைகளை நீட்டியவர்கள் எல்லாம் வாயடைத்து நிற்பார்கள் என்பது எமது கட்சியின் உறுதியாக நிலைப்பாடாகும். 

நல்லாட்சிக்கான அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் நிலைப்பாட்டில் இருக்குமானால் ஜோசப்பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜுடன் கொலைகள் நிறுத்தப்படவில்லை. பல கொலைகள் இடம்பெற்றுள்ளது, என குறிப்பிட்டுள்ளார்.